அண்ணாமலைக்கு அமைச்சர் பதவியில்லை; கோவை மக்கள் ஏமாற்றம்!
அண்ணாமலைக்கு அமைச்சர் பதவியில்லை; கோவை மக்கள் ஏமாற்றம்!
அண்ணாமலைக்கு அமைச்சர் பதவியில்லை; கோவை மக்கள் ஏமாற்றம்!
UPDATED : ஜூன் 11, 2024 04:14 AM
ADDED : ஜூன் 11, 2024 01:54 AM

கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வியடைந்தாலும், அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியுடன் அமைச்சர் பதவியும் தரப்படும் என்று, எதிர்பார்த்திருந்த கோவை மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, இந்தத் தொகுதிக்காக 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் அறிக்கை கொடுத்திருந்தார். அது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. முக்கியமாக, தொழில் அமைப்பினர், அண்ணாமலை வென்றால், கோவையில் பெரும் மாற்றம் நிகழும் என்று நம்பினர்.
எகிறிய எதிர்பார்ப்பு
அவர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவார்; விமான நிலைய விரிவாக்கம், கோவை சந்திப்பு மேம்பாடு, புதிய ரயில்கள், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதியுதவி, புதிய பை பாஸ் திட்டங்கள், பசுமை வழிச்சாலைகள், தொழில் மேம்பாட்டுக்கான பல திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று கருதினர். அதன் அடிப்படையில், நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கள் ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.
ஆனால், கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று பலரும் நினைத்திருந்த அண்ணாமலை, தோல்வி அடைந்தார். இருப்பினும், தனிப்பட்ட முறையில் அவருக்கே, கோவை மக்களின் அதீத ஆதரவு கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது.
அவர் தோற்றாலும், மத்தியில் பா.ஜ., ஆட்சி தொடர்வதால், மத்திய அமைச்சரவையில் அண்ணாமலைக்கு இடம் தரப்படும்; அதை வைத்து, கோவைக்கான பல திட்டங்களை அவர் நிறைவேற்றுவார் என்று பலரும் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அமைச்சரவை பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை; இது கோவை மக்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்ததால், அமைச்சர் பதவி வேண்டாமென்று அண்ணாமலையே கூறி விட்டதாகவும், மாநிலத் தலைவர் பதவியில் தொடர்வதையே அவர் விரும்புவதாகவும், கட்சி நிர்வாகிகள் தகவல் பகிர்கின்றனர்.
அண்ணாமலைக்கு பாராட்டு
அதற்கேற்ப, தேர்தல் தோல்விக்குப் பின் அவருடைய பதவி பறிக்கப்படும் என்று தகவல் பரவிய நிலையில், அண்ணாமலையை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதனால் அவர் மாநிலத் தலைவர் பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.
அதே வேளையில், இப்போதும் பா.ஜ., ஆட்சி தொடர்வதால், செல்வாக்கைப் பயன்படுத்தி, கோவைக்குரிய திட்டங்களை நிறைவேற்ற, அண்ணாமலை முயற்சி எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 'மாஜி' அமைச்சர் வேலுமணி, இதைப்பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
அதற்கேற்ப, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன் என்று, அண்ணாமலையும் உறுதி அளித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு, இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில், அதற்குள் விமான நிலைய விரிவாக்கம், கோவை சந்திப்பு மேம்பாடு உள்ளிட்ட சில முக்கியத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அந்தத் தேர்தலில் பா.ஜ., தனித்தே நின்றாலும், அமோக வெற்றி பெறும் என்பது நிச்சயம்.
-நமது சிறப்பு நிருபர்-