ஆர்ப்பரிக்கும் நொய்யல்! 'ஸ்மார்ட் சிட்டி' குளங்கள் அம்போ
ஆர்ப்பரிக்கும் நொய்யல்! 'ஸ்மார்ட் சிட்டி' குளங்கள் அம்போ
ஆர்ப்பரிக்கும் நொய்யல்! 'ஸ்மார்ட் சிட்டி' குளங்கள் அம்போ
UPDATED : ஜூலை 17, 2024 04:10 AM
ADDED : ஜூலை 17, 2024 01:06 AM

கோவை:கோவையை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில், தொடர் மழை காணப்படுவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிச்சி குளம், குனியமுத்துார் செங்குளம், வெள்ளலுார் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது; ஆனால், நகரப்பகுதியில் உள்ள 'ஸ்மார்ட் சிட்டி' குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடவில்லை.
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், தொடர் மழை காணப்படுவதால், கோவைகுற்றாலம் நீர் வீழ்ச்சிக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்திருக்கிறது. நொய்யல் ஆற்றில் கூடுதுறையில் துவங்கி, இரு கரையையும் தொட்டவாறு, தண்ணீர் செல்கிறது.
சித்திரைச்சாவடி அணைக்கட்டை கடந்து, ஒருபுறம் நீர் வழங்கு வாய்க்கால் வழியாக குளங்களுக்கும், இன்னொரு புறம் நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் சீறிப்பாய்கிறது. விநாடிக்கு, 1,200 கன அடி தண்ணீர் ஆற்றில் பாய்கிறது.
![]() |
குளங்களுக்கு வெள்ளம்
பொதுப்பணித்துறை கட் டுப்பாட்டில் உள்ள குளங்களுக்கு, தண்ணீர் திருப்பி விடப்பட்டு இருக்கிறது.
இதில், புதுக்குளம், கோளராம்பதி குளங்கள் நிரம்பி விட்டன. ஈஷா அருகே உள்ள உக்குளம் நிரம்பியிருக்கிறது. சொட்டையாண்டி குட்டை, கங்க நாராயண் சமுத்திரம் குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.
பேரூரில் படித்துறையை கடந்து நொய்யலில் வரும் வெள்ளம், கோயமுத்துார் அணைக்கட்டை கடந்து, குறிச்சி குளத்துக்கு செல்கிறது.
குனியமுத்துார் அணைக்கட்டு வழியாக செங்குளத்துக்கும், வெள்ளலுார் ராஜவாய்க்கால் வழியாக வெள்ளலுார் குளத்துக்கும், தண்ணீர் அனுப்பப்படுகிறது.
![]() |
புதர்மண்டிய வழித்தடம்
உக்கடம் பெரிய குளத்துக்கு சேத்துமா வாய்க்கால் வழியாக தண்ணீர் வர வேண்டும். இவ்வழித்தடம் புதர்மண்டி கிடப்பதாலும், மாநகராட்சியால் துவக்கப்பட்ட பராமரிப்பு பணி முடியாத காரணத்தாலும் ஆண்டிபாளையம் பிரிவில் உள்ள மதகுகள் சிறிதளவு திறக்கப்பட்டுள்ளது; இதன் காரணமாக, உக்கடம் பெரிய குளத்துக்கு குறைந்தளவே தண்ணீர் வருகிறது.
இதேபோல், நாகராஜபுரம் பகுதியில் நீர் வழங்கு வாய்க்கால் குறுக்கே பாலம் அகல்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதன் காரணமாக, வாய்க்கால் குறுக்கே மண் கொட்டி, மழை நீர் தடுக்கப்பட்டுள்ளது. அதனால், கிருஷ்ணாம்பதி குளத்துக்கு நீர் வரத்தில்லை.
விரயமாகிறது மழை நீர்
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, இதர 'ஸ்மார்ட் சிட்டி' குளங்களில் மழை நீர் தேக்க, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.
ஒவ்வொரு கட்டடத்திலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வலியுறுத்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், நொய்யலில் வரும் மழை நீரை சேகரிக்காமல், கோட்டை விட்டு வருகிறது.
மாநகராட்சி வசமுள்ள கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன், செல்வசிந்தாமணி மற்றும் உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் குளங்களில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல கோடி ரூபாய் செலவழித்து மேம்படுத்தப்பட்டது.
இக்குளங்களில் மாநகர பகுதிகளில் வெளியேற்றப்படும் கழிவு நீரே தேங்கியிருக்கிறது. இவற்றை வெளியேற்றி விட்டு, நொய்யலில் செல்லும் புது வெள்ள நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.