Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ எந்த மாநிலத்துக்கும் பாகுபாடு காட்டவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில்

எந்த மாநிலத்துக்கும் பாகுபாடு காட்டவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில்

எந்த மாநிலத்துக்கும் பாகுபாடு காட்டவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில்

எந்த மாநிலத்துக்கும் பாகுபாடு காட்டவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு பதில்

ADDED : ஜூலை 13, 2024 04:15 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தர்மபுரி மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார். அப்போது, 'தமிழக திட்டங்களுக்கு நிதி வழங்க, மத்திய அரசுக்கு இன்னும் மனம் வரவில்லை. ஒப்புக்கொள்ளப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை கூட தர மறுக்கிறது. இனியாவது யார் மீதும் விருப்பு, வெறுப்பின்றி மத்திய அரசு செயல்பட வேண்டும்' என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்து, மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் திட்டங்களில், தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியதில் உண்மையில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 10 ஆண்டுகளில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை கணிசமாக அதிகரித்துள்ளது.

ரயில்வே


தமிழகத்தில், ரயில்வே துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு முன் எப்போதும் இல்லாத வகையில், 10 ஆண்டுகளில் வேகமாக பணியாற்றி வருகிறது. 2009 முதல் 2014 வரை, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு, 879 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு பட்ஜெட்டில், தமிழகத்தில் புதிய ரயில் தடம், மின் மயமாக்கல், புதிய ரயில்கள் இயக்குதல், ரயில் நிலையங்கள் மேம்பாடு போன்ற பணிகளுக்காக, 6,331 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இது, ஏழு மடங்கு அதிகம்.

'அம்ரித் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்கள் மறு வடிவமைப்பு செய்யப்படுகின்றன. தமிழகத்தில், 77 ரயில் நிலையங்கள், இத்திட்டத்தில் அடையாளம் காணப்பட்டு, 66 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2009 முதல் 2014 வரை, 504 கி.மீ., ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டது; 10 ஆண்டுகளில், 2,150 கி.மீ.,க்கும் அதிகமான துாரம் மின் மயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை


தமிழகத்தில், 2014ல், 4,985 கி.மீ.,யாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள், தற்போது 6,806 கி.மீ.,யாக அதிகரித்துள்ளன. தேசிய நெடுஞ்சாலை துறையில் மட்டும், 2014 முதல் 64,704 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,094 கி.மீ., நீளமுள்ள திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், மத்திய அரசு மொத்தம், 2லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

சிவில் விமான போக்குவரத்து துறையில், தமிழகத்தில், 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெரிய துறைமுகங்கள் வழியே முடிக்கப்பட்ட, 62 திட்டங்களின் மொத்த முதலீடு 10,168 கோடி ரூபாய். மீன்வளத்துறையில், 1,574 கோடி ரூபாய் மதிப்பிலான 64 திட்டங்களுக்கும், ஏழு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கவும் ஒப்புதல் வழங்கி உள்ளது.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளில், தமிழகத்தில், 15 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளை கட்ட, மத்திய அரசு, 20,000 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2023 - 24ல், தமிழகத்தின் செலவினம், 13,392.89 கோடி ரூபாய். இது மொத்த செலவினத்தில், 12.71 சதவீதம்.

சுகாதார துறை


புதிய மருத்துவ கல்லுாரிகள் நிறுவுதல் திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 11 மருத்துவ கல்லுாரிகளுக்குமத்திய அரசு ஒப்புதல் அளித்து அவை முழுமையாக செயல்படுகின்றன. விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில், இந்தியாவிலே முதன் முதலாக, பிரதமரின் ஒருங்கிணைந்த மெகா ஜவுளிப்பகுதிகள் மற்றும் ஆயத்த ஆடைகள் பூங்காவுக்கு, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரத்தில், 212 கோடி ரூபாயில், மருத்துவ கருவிகள் பூங்கா அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், பொது உள்கட்டமைப்பு வசதிகளுக்காக, மத்திய அரசு 100 கோடி ரூபாயை வழங்குகிறது.

ஒத்துழைப்பில்லை

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த, மாநில அரசின் முழு ஆதரவு தேவை. உலக முக்கியத்துவம் வாய்ந்த, 'இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வகம்' என்ற லட்சிய திட்டம் தமிழகத்தில் முன்மொழியப்பட்டது. தமிழக அரசின் போதிய ஆதரவு இல்லாததால், இத்திட்டம் பல ஆண்டுகளாக துவக்கப்படாமல் உள்ளது. இது தவிர, 20,077 கோடி ரூபாய் மதிப்பிலான, 10 மெகா உள்கட்டமைப்பு திட்டங்களில், 25 பிரச்னைகள் அரசிடம் நிலுவையில் உள்ளன.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் தமிழகத்திற்கு, 2019 - 2020 முதல் 2023 - 24ம் ஆண்டு வரை, 12,491 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், 5.167 கோடி ரூபாய் மட்டுமே தமிழக அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், 8.35 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ள மாநிலங்களில், தமிழகம், 10ம் இடத்தில் உள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், மாநிலத்தில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை இருந்தும், பயனாளிகளை சரிபார்ப்பு மற்றும் பதிவு செய்வதில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us