Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ புதிய முயற்சி!நுழைவு தேர்வு மோசடியை தடுக்க யு.பி.எஸ்.சி., ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு

புதிய முயற்சி!நுழைவு தேர்வு மோசடியை தடுக்க யு.பி.எஸ்.சி., ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு

புதிய முயற்சி!நுழைவு தேர்வு மோசடியை தடுக்க யு.பி.எஸ்.சி., ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு

புதிய முயற்சி!நுழைவு தேர்வு மோசடியை தடுக்க யு.பி.எஸ்.சி., ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு

ADDED : ஜூன் 24, 2024 11:36 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் நடந்துள்ள மோசடி, மிகப்பெரும் பிரச்னையாக உருவாகிஉள்ள நிலையில், தேர்வுகளில் மோசடியை தவிர்க்க, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் புதிய முயற்சிகளை எடுத்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில், பல மோசடிகள் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு, யு.ஜி.சி., நெட் தேர்வு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

வினாத்தாள் கசிவு உட்பட பல மோசடிகள் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உட்பட, 14 முக்கிய தேர்வுகளை நடத்தும், யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கண்காணிப்பு

தேர்வுகளில் மாணவர்கள் மோசடியில் ஈடுபடுவது, ஆள்மாறாட்டம் போன்றவற்றை தடுக்கும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான சேவைகளை வழங்குவதற்கான டெண்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தகுதியுள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் இதில் பங்கேற்கலாம். வரும், ஜூலை, 7ம் தேதி வரை டெண்டர் சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள டெண்டர் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாவது:

முறைகேடுகளை தடுத்து, தேர்வுகளை நியாயமாகவும், சுதந்திரமாகவும், பாரபட்சம் இல்லாமலும், நேர்மையாகவும் நடத்துவதில் தேர்வாணையம் உறுதியாக உள்ளது. இந்த நோக்கத்துடன், தொழில்நுட்ப உதவிகளுடன், தேர்வுகளை கண்காணிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வுக்காக விண்ணப்பிக்கும்போது, ஆதார் அடிப்படையில் மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உருவாக்கப்படும். மேலும், அவர்கள் எந்த இடத்தில் இருந்து விண்ணப்பிக்கின்றனர் என்பது கண்காணிக்கப்படும்.

தேர்வு மையத்துக்கு வரும்போது ஆதார் அடிப்படையிலான, கைவிரல் பதிவை அடிப்படையாக வைத்து, மாணவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.

அதுபோல், விண்ணப்பிக்கும்போது மற்றும் தேர்வு மையத்துக்கு வரும்போது, அவர்களுடைய முகங்களை படம்பிடித்து, 'பேசியல் ரெகக்னிஷன்' எனப்படும் முகத்தை வைத்து அடையாளம் காணும் வசதியும் செய்யப்படும்.

இதைத் தவிர தேர்வு மையங்களில், அனைத்து அறைகளிலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

ஒவ்வொரு, 24 மாணவருக்கு, ஒரு சிசிடிவி கேமரா வசதி அமைக்கப்படும். அந்த சிசிடிவி கேமரா காட்சிகள் நேரலையில் கண்காணிக்கப்படுவதுடன் பதிவும் செய்யப்படும்.

கட்டுப்பாட்டு அறை

வினாத்தாள் உள்ளிட்டவை வைக்கப்படும் அறைகள், மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் வைக்கும் அறைகளிலும், இதுபோன்ற கண்காணிப்பு வசதிகள் செய்யப்படும்.

மாணவர்களைத் தவிர, தேர்வு மையத்தில் இருக்கும் தேர்வு கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோரின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும்.

இதைத் தவிர, மாணவர்களுக்கான தேர்வு அனுமதி நுழைவுச் சீட்டு, கியூ.ஆர்., குறியீடு வாயிலாக அடையாளம் காணப்படும். ஒவ்வொரு தேர்வு மையத்தின் நுழைவு வாயிலிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

தேர்வு மையங்களில் மாணவர்களின் செயல்பாடுகள், ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா என்பது நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்படும். ஏதாவது முறைகேடுகள், மோசடிகள் நடப்பதாக சந்தேகம் இருந்தால், கட்டுப்பாட்டு அறையை எச்சரிக்கும் வசதியும், சிசிடிவி கேமராவுடன் இணைத்து செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us