Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை; கர்நாடகாவிற்காக கரையும் மலைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை; கர்நாடகாவிற்காக கரையும் மலைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை; கர்நாடகாவிற்காக கரையும் மலைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை; கர்நாடகாவிற்காக கரையும் மலைகள்

UPDATED : ஜூன் 03, 2024 02:48 AMADDED : ஜூன் 02, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், மலைகளால் சூழப்பட்ட அமைப்பை கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை பகுதி மலைகளில் எடுக்கப்படும் கருப்பு நிற கிரானைட் உலகளவில் பிரபலம். இது தவிர மற்ற வகை கற்கள், ஜல்லிகள், 'எம்-சாண்ட், பி-சாண்ட்' இவற்றிற்காக குடையாத மலைகளே இல்லை எனும் அளவிற்கு கனிமவள கொள்ளை ஜரூராக நடக்கிறது.

மாவட்டத்தில், ஓசூர் பகுதியில் உள்ள, 110 குவாரிகள் உட்பட மொத்தம், 360க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவற்றிற்கு அனுமதி இருந்தாலும், 90 சதவீத குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லை. இதன் உரிமையாளர்கள் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களின் பினாமிகளாகவே உள்ளனர்.

இவர்கள் நினைத்ததை மட்டுமே செய்ய முடியும் என்ற நிலையும் உள்ளது. காரணம் எந்த கட்சியினராக இருந்தாலும், இவர்கள் சொல்படிதான் நடக்க முடியும் என்ற நிலையும், தேர்தல் சமயங்களில், இவர்கள் கொட்டி கொடுக்கும் பணமும், அதற்கு அச்சாரமாக உள்ளது.

கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனஹள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும், 6,000 லோடுகளுக்கு மேல் கனிம வளக் கொள்ளை நடக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கர்நாடக மாநிலத்திற்கே கடத்தப்படுகிறது.

இவை, கர்நாடகத்தில் மொத்தமாக பதுக்கி, அங்கிருந்து பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். கர்நாடகாவில் சத்தமின்றி கட்டப்பட்ட யார்கோள் அணைக்கே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தான் ஜல்லி, 'எம்-சாண்ட்' சென்றுள்ளது என்பது தான் வேதனை.

அனுமதியளித்த அளவை விட அதிகமாக மலைகள் வெட்டப்பட்டு விதிமீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. வனச்சரகங்களுக்கு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் மட்டுமே, குவாரிகள் அமைக்க அனுமதிக்க வேண்டும். இதில், எந்த விதிகளும் தற்போது நடைமுறையில் இல்லை. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், யானைகளும் விவசாய நிலங்களுக்குள் வருவதுடன், உயிர்பலியும் அதிகரிக்கிறது.

இயற்கைக்கு மாறாக மலைகள் வெட்டப்படுவதால், மழை வளம் குறைந்து, சீதோஷ்ண மாற்றம் ஏற்படுகிறது. கல்குவாரிகளால் அரசுக்கு கிடைக்கும் வருவாயை விட, ஏற்படும் இழப்புகளே அதிகமாக உள்ளது. ஆனால் இதை, எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.

கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., செல்லக்குமார் கூறியதாவது:

என் அழுத்தம் காரணமாகவே கனிமவள அதிகாரிகள் மாவட்டத்தில், ஒன்பது குவாரிகளில் ஆய்வு செய்து, 360 கோடி ரூபாய் அபராதம் விதித்தனர். ஆனால், மொத்தமுள்ள, 360 குவாரிகளில் ஆய்வு நடத்தியிருந்தால், 25,000 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் சுரண்டப்பட்டிருப்பது தெரிந்திருக்கும்.

நான் தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. கோடி கோடியாக சம்பாதிக்கும் கல்குவாரி உரிமையாளர்களுக்கு, அபராத தொகையில் அரசு சலுகை தருகிறது. அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பேசுகையில், 'கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்' என்றார். இப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு அதை நினைவு படுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us