மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்; நவீன் பட்நாயக் பங்கேற்க அழைப்பு
மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்; நவீன் பட்நாயக் பங்கேற்க அழைப்பு
மார்ச் 22ல் சென்னையில் கூட்டம்; நவீன் பட்நாயக் பங்கேற்க அழைப்பு
ADDED : மார் 12, 2025 04:44 AM

லோக்சபா தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, மார்ச் 22ல் சென்னையில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க வரும்படி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.பி., தயாநிதி ஆகியோர், ஒடிசாவில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
லோக்சபா தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு குறைவு உள்ளிட்ட விவகாரங்களை தேசிய அளவில் எடுத்து செல்வதற்கு, தென் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களை இணைத்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்து, அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர, சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, தென் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக, பிற மாநில முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து, கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைக்க, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு அமைச்சர் தியாகராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி எம்.பி., ஒடிசாவுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் செல்ல முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அமைச்சர் ராஜா, எம்.பி., தயாநிதி ஆகியோர், ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தள கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக்கை நேற்று சந்தித்தனர். தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறி, சென்னையில் தமிழக அரசு சார்பில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அழைப்பு கடிதத்தை வழங்கினர்.
சந்திப்பு குறித்து தயாநிதி கூறுகையில், ''தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய ஏழு மாநிலங்களும், தொகுதி மறுவரையறை காரணமாக பாதிக்கப்பட உள்ளன. இதை தடுக்க, மார்ச் 22ம் தேதி சென்னையில் நடக்க உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்பதாக நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்,'' என்றார்.
- நமது நிருபர் -