படையெடுத்த அமைச்சர்கள் - பலமில்லாத எதிரணி: சிவாவின் வெற்றிக்கு கைகொடுத்தது என்ன?
படையெடுத்த அமைச்சர்கள் - பலமில்லாத எதிரணி: சிவாவின் வெற்றிக்கு கைகொடுத்தது என்ன?
படையெடுத்த அமைச்சர்கள் - பலமில்லாத எதிரணி: சிவாவின் வெற்றிக்கு கைகொடுத்தது என்ன?
ADDED : ஜூலை 14, 2024 12:37 AM

இடைத்தேர்தல் களத்தில், ஆளுங்கட்சியான தி.மு.க., ஆரம்பம் முதல் அடித்து ஆடத் துவங்கியது. தி.மு.க., சார்பில், சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பணிக்குழு
அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, பன்னீர்செல்வம், சக்கரபாணி, அன்பரசன், சிவசங்கர், கணேசன், மகேஷ், லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் இடம் பெற்றனர்.
கூடுதலாக அமைச்சர்கள் ரகுபதி, முத்துசாமி, காந்தி, ராஜகண்ணப்பன், மூர்த்தி மற்றும் பேச்சாளர் லியோனி உள்ளிட்ட பெரிய பட்டாளமே களமிறக்கப்பட்டது. தி.மு.க., இளைஞரணி அமைப்பாளரான அமைச்சர் உதயநிதி, கடைசி இரண்டு நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கூட்டணி கட்சித் தலைவர்களான திருமாவளவன், செல்வப்பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்களும் பிரசாரம் செய்தனர்.
ஆளுங்கட்சியை எதிர்த்து களமிறங்கிய பா.ம.க.,வினர், போதிய கூட்டணி மற்றும் பண பலமின்றி தேர்தல் பணியை துவக்கினர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மக்களை சந்தித்து பிரசாரம் செய்தனர். தி.மு.க., - பா.ம.க., வேட்பாளர்கள் செல்லாத பல இடங்களிலும்,மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு சேகரித்தனர்.
இவர்கள் தினந்தோறும் தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து, வீடு வீடாக வாக்காளர்கள் விபரத்தை சரிபார்த்து, துல்லியமாக கணக்கிட்டனர்.
பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. கிராமங்களில் பொதுப் பிரச்னைக்கு தாராள நிதியுதவி செய்யப்பட்டது.
விமர்சித்தார்
மறுபக்கம், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., போட்டியிடாததால், அக்கட்சித் தொண்டர்கள் தி.மு.க.,விற்கு ஆதரவளிக்க வேண்டும் என, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் பிரசாரத்தில் தெரிவித்தனர். 'நமக்கு பொது எதிரி பா.ஜ., கூட்டணி தான்' என, அ.தி.மு.க., தொண்டர்களை தி.மு.க.,வினர் தங்கள் பக்கம் இழுத்தனர்.
போதாக்குறைக்கு பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். இது, பா.ம.க.,வுக்கு சாதகமான மனநிலையில் இருந்த அ.தி.மு.க.,வினரை, தி.மு.க.,விற்கு ஆதரவாக திரும்பச் செய்தது.
இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் கூட்டணி பலம், அமைச்சர்களின் தேர்தல் பணி, தாராளமான பணப்புழக்கம், முதல்வரின் கண்டிப்பான உத்தரவு, தி.மு.க.,விற்கு பெரும் பலமாக அமைந்தன.
அத்துடன், பலமற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி, எதிர்ப்பு ஓட்டுகள் சிதறல் உள்ளிட்ட காரணங்களால், தி.மு.க., இமாலய வெற்றியை பெற்றுள்ளது.
- நமது நிருபர் -