உ.பி.,யில் அதிக தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி அள்ளியது எப்படி?
உ.பி.,யில் அதிக தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி அள்ளியது எப்படி?
உ.பி.,யில் அதிக தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி அள்ளியது எப்படி?
ADDED : ஜூன் 05, 2024 02:45 AM

லக்னோ: மற்ற எந்த மாநிலங்களையும் விட, உத்தர பிரதேச அரசியலில், ஜாதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதை உணர்ந்து, பல்வேறு தரப்பினருக்கு வாய்ப்பு அளித்ததுடன், மக்களிடையே நேரடியாகச் சென்று பிரசாரம் செய்ததே, சமாஜ்வாதியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
நாட்டிலேயே மிகவும் அதிக அளவாக, 80 எம்.பி.,க்களை அனுப்புகிறது உத்தர பிரதேசம். அதனால், அரசியல் ரீதியில் இந்த மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த தேர்தலில், மொத்தமுள்ள, 80 தொகுதிகளில், 'இண்டியா' கூட்டணியின் கீழ் இணைந்து போட்டியிட்ட சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ், 45 இடங்களை கைப்பற்றியுள்ளன. இது, பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பதை தடுத்துள்ளது. மேலும், இண்டியா கூட்டணிக்கு மிகப்பெரும் பலத்தையும் அளித்துள்ளது.
இந்தத் தேர்தலில் துவக்கத்தில் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை இருந்தாலும், சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே சமரசம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூட்டாக பல பிரசார கூட்டங்களில் பங்கேற்றனர்.
தீவிர பிரசாரம் ஒரு பக்கம் இருந்தாலும், சமாஜ்வாதியின் 'சீட்' வினியோகம் அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதனால்தான், இந்தத் தேர்தலில், அதிக இடங்களில் வென்ற கட்சிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
வழக்கமாக, யாதவ் - முஸ்லிம் என்ற அடிப்படையிலேயே சமாஜ்வாதி தேர்தல்களை சந்தித்து வந்துள்ளது. இந்த தேர்தலில் அதில் மாற்றம் செய்தது.
அதன்படி, அகிலேஷ் யாதவ் உட்பட, அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே யாதவர்கள். யாதவர் அல்லாத மற்ற ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த, 27 பேருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.
உயர் வகுப்பைச் சேர்ந்த, 11 பேருக்கும் சீட் தரப்பட்டது. நான்கு முஸ்லிம்கள் களமிறக்கப்பட்டனர். இதைத் தவிர, தனித் தொகுதிகளில், 15 எஸ்.சி., பிரிவினர் நிறுத்தப்பட்டனர்.
இது சமாஜ்வாதிக்கு சரியாக வேலை செய்துள்ளது; தனிப்பட்ட முறையில், 37 இடங்களில் வென்றுள்ளது. கடந்த, 2019 தேர்தலில், பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி போட்டியிட்டது.
அப்போது, 37 இடங்களில் போட்டியிட்ட சமாஜ்வாதி, 10 யாதவர்களை களமிறக்கியது. ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. பகுஜன் சமாஜ், 10 இடங்களில் வென்றது.
அந்தத் தேர்தலில் பா.ஜ., 62 இடங்களிலும், கூட்டணி கட்சியான அப்னி தளம், இரண்டு இடங்களிலும் வென்றது.
அதற்கு முன், 2014 தேர்தலில், சமாஜ்வாதி, 78 இடங்களில் போட்டியிட்டது. அதில் முலாயம் சிங் குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர் உட்பட, 12 யாதவர்கள் நிறுத்தப்பட்டனர்.
யாதவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவே, சமாஜ்வாதிக்கு அடித்தளமாகும். தற்போது, மற்ற ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் தலித் வேட்பாளர்களை அதிகளவில் நிறுத்தியதே, வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.
இதைத் தவிர, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ததும், சமாஜ்வாதியின் வெற்றிக்கான மற்றொரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மாநிலத்தில் ஆளும் பா.ஜ., பிரமாண்ட பேரணிகள் நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத் என, முக்கிய தலைவர்கள் பிரமாண்ட பேரணிகள், பிரசார கூட்டங்களில் பங்கேற்றனர்.
ஒரு சில பிரசார கூட்டங்களை நடத்தினாலும், மக்களை நேரடியாகசந்தித்து ஓட்டு கேட்டதே, சமாஜ்வாதிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
பத்திரிகை யாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த அகிலேஷ் யாதவ்.