உயர் ரக சரக்கு 'எனக்கு'; மட்டமானது 'உனக்கு' : பிடிபடும் பாட்டில்களை பங்கு பிரிப்பதில் பாகுபாடு
உயர் ரக சரக்கு 'எனக்கு'; மட்டமானது 'உனக்கு' : பிடிபடும் பாட்டில்களை பங்கு பிரிப்பதில் பாகுபாடு
உயர் ரக சரக்கு 'எனக்கு'; மட்டமானது 'உனக்கு' : பிடிபடும் பாட்டில்களை பங்கு பிரிப்பதில் பாகுபாடு
ADDED : ஜூலை 16, 2024 12:31 AM

கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் பிடிபடும் உயர்ரக மதுபானங்களை உயரதிகாரிகள் எடுத்து செல்வதாக போலீசார் புலம்பி வருகின்றனர்.
புதுச்சேரி மதுபானங்களை மலிவு விலைக்கு வாங்கி தமிழக பகுதிகளுக்கு பஸ், கார், பைக் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் கடத்திச் செல்கின்றனர். இதைத் தடுக்க தமிழக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் உட்கோட்டம் வழியாக அதிகளவு மதுபானங்கள் கடத்திச் செல்வதால், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலக்க பிரிவு போலீசார் பெரிய முதலியார்சாவடி, பட்டானுார், கிளியனுார், அனிச்சகுப்பம் ஆகிய நான்கு இடங்களில் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் அமைத்து, இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் செல்பவர்கள் இ.சி.ஆர்., சாலை வழியையே அதிகளவு பயன்படுத்துகின்றனர். இந்த வழியாக சொகுசு காரில் சென்னைக்கு செல்பவர்கள் புதுச்சேரியில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை மதிப்புள்ள உயர்ரக மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.
இவர்கள், பெரிய முதலியார்சாவடி மற்றும் அனிச்சகுப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியை கடக்கும்போது அங்குள்ள போலீசார் கார்களை நிறுத்தி சோதனை செய்கின்றனர். சொகுசு கார்களில் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் இருப்பதால் முக்கிய புள்ளிகளாக இருக்கக்கூடும் நமக்கு ஏன் வம்பு என மதுவிலக்கு அதிகாரிகளிடம் விபரத்தை கூறி கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்கு அனுப்பி விடுகின்றனர்.
அங்கு சென்றதும் அங்குள்ள அதிகாரி, டிரைவர் மீது சிறிய வழக்கை போட்டு விட்டு, காரை விடுவித்து, உயர்ரக மது பாட்டில்களை எடுத்துக் கொள்கின்றனர். அதன் பின் வழக்கில் சம்மந்தபட்ட நபரை காவல் நிலைய ஜாமினில் அனுப்பி விடுகின்றனர்.
மதுவிலக்கு காவல் நிலையம் சார்பில் அங்கு பணிபுரியும் போலீசாருக்கு மாதம் ஒரு முறை, பிடிபடும் சரக்கில் இருந்து சிலவற்றை பிரித்துக் கொடுப்பது வழக்கம். அதுபோன்று தரும் போது, விலை உயர்ந்த சரக்கு பாட்டில்களை அங்குள்ள அதிகாரி எடுத்து கொண்டு மட்ட சரக்குகளை போலீசாருக்கு பிரித்து கொடுத்துள்ளார்.
இதை ஒரு சில போலீசார் வாங்க மறுத்து, சக போலீசாரிடம் உயர்ரக சரக்கை எடுத்து கொண்டு நமக்கு மட்ட சரக்கை தருவதா என புலம்பி வருகின்றனர். மேலும் மதுபானம் கடத்திய வழக்கில் சிக்கியவர்கள் வழக்கை முடிப்பதற்காக நீதிமன்றத்திற்கு செல்லும்போது, பிடிபட்ட உயர்ரக மதுபாட்டில்களுக்கு பதில் வேறு மதுபாட்டில்களின் பெயர் வழக்கில் இருப்பதை கண்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட மதுவிலக்கு அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
-நமது நிருபர்-.