Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ ரஷ்யாவுக்கு ஆட்களை கடத்தி போரில் ஈடுபடுத்தும் கும்பல்: தமிழகத்தில் சி.பி.ஐ., தேடுதல் வேட்டை

ரஷ்யாவுக்கு ஆட்களை கடத்தி போரில் ஈடுபடுத்தும் கும்பல்: தமிழகத்தில் சி.பி.ஐ., தேடுதல் வேட்டை

ரஷ்யாவுக்கு ஆட்களை கடத்தி போரில் ஈடுபடுத்தும் கும்பல்: தமிழகத்தில் சி.பி.ஐ., தேடுதல் வேட்டை

ரஷ்யாவுக்கு ஆட்களை கடத்தி போரில் ஈடுபடுத்தும் கும்பல்: தமிழகத்தில் சி.பி.ஐ., தேடுதல் வேட்டை

ADDED : ஜூன் 25, 2024 01:14 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: மாதம், 1.50 லட்சம் ரூபாய் என ஆசை காட்டி, ரஷ்யாவுக்கு ஆட்களை கடத்தி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தும் கும்பல் குறித்து, ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுதும் மர்ம நபர்கள், 'யு டியூப்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில், 'ரஷ்யாவில், 1.50 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கி தரப்படும்; விசா மற்றும் விமான பயண டிக்கெட் கட்டணம் கிடையாது' என்று அறிவித்து, ஆட்களுக்கு வலை வீசுகின்றனர். அதற்காக, நாடு முழுதும் முகவர்களை நியமித்துஉள்ளனர்.

அவர்களின் வலையில் விழும் நபர்களை மூளைச்சலவை செய்து, ரஷ்யாவுக்கு கடத்திச் சென்று பயிற்சி அளித்து, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட வைக்கின்றனர்; மறுப்பு தெரிவித்தால் சித்ரவதை செய்கின்றனர்.

அவ்வாறு கடத்தப்பட்ட நம் நாட்டைச் சேர்ந்த மூவர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, மார்ச் 6ம் தேதி, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மறுநாள், இந்த மனித கடத்தல் தொடர்பாக, டில்லி, மும்பை, சென்னை, மதுரை உட்பட ஏழு நகரங்களில், 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அருண், பிரியன் என்ற யேசுதாஸ் ஆகியோரை கைது செய்தனர்.

மும்பையில் தங்கியிருந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிகில் ஜோபி பென்சன், அந்தோணி மைக்கேல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

நிகில் ஜோபி பென்சன், ரஷ்யாவில் மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்துள்ளார். அந்நாட்டு ராணுவத்திற்கு ஆட்களை சேர்ப்பதில் முக்கிய நபராக செயல்பட்டுள்ளார். தமிழகத்தில் நிகில் ஜோபி பென்சன், அந்தோணி மைக்கேல் பின்னணியில், மிகப்பெரிய கும்பல் செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

இந்த கும்பலை பிடிக்க, ஈரோடு, மதுரை மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த ஸ்ரீவித்யா மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் பழனிசாமி மற்றும் மற்றொரு நபர் சந்தோஷ் ஆகியோரும் ஆள் கடத்தல் கும்பலில் உள்ளனர்.

ரஷ்யாவுக்கு கடத்தப்படும் நபர்கள் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். உக்ரைனுக்கு எதிரான போரில் முன்களத்தில் நிறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us