Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/தி.மு.க., அமைச்சர்கள், மா.செ.,க்கள் கருத்து கணிப்புகளால் 'கலக்கம்'

தி.மு.க., அமைச்சர்கள், மா.செ.,க்கள் கருத்து கணிப்புகளால் 'கலக்கம்'

தி.மு.க., அமைச்சர்கள், மா.செ.,க்கள் கருத்து கணிப்புகளால் 'கலக்கம்'

தி.மு.க., அமைச்சர்கள், மா.செ.,க்கள் கருத்து கணிப்புகளால் 'கலக்கம்'

ADDED : ஜூன் 03, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
தேர்தலுக்கு பிந்தைய சில கருத்துக் கணிப்புகளில், தமிழகத்தில் பா.ஜ., மூன்று தொகுதிகளையும், அ.தி.மு.க., எட்டு தொகுதிகளையும் கைப்பற்றும் என்று வெளியான தகவல், தி.மு.க.,வில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. பதவிகள் பறிக்கப்படலாம் என்பதால், அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், தி.மு.க., போட்டியிட்ட தொகுதிகள், வேட்பாளர்கள் தேர்வு ஆகியவை முழுக்க, முழுக்க, தி.மு.க., தலைமைக்கு நெருக்கமான தேர்தல் வியூகம் அமைக்கும் நிறுவனம் வாயிலாகவே நடந்தது. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, கட்சி நிர்வாகிகளைவிட, இந்த தேர்தலில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

பதவி பறிக்கப்படும்


'கடந்த 2019 லோக்சபா தேர்தலைவிட கூடுதலான ஓட்டு சதவீதத்தில் வெற்றி பெற வேண்டும். நாடும் நமதே; 40ம் நமதே. ஓட்டு கள் குறைந்து தோல்வி அடைந்தால் சர்வாதிகாரியாக மாறி, அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் பதவி பறிக்கப்படும்' என, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த கூட்டங்களில், முதல்வர் ஸ்டாலின் பல முறை எச்சரித்தார்.

அதேபோல், அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, '5 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்' என சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, புதுச்சேரி போன்ற தொகுதிகளில், பா.ஜ., மலரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு இல்லை


அ.தி.மு.க.,வுக்கு கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர் போன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இப்படி தனியார், 'டிவி' சேனல்கள் தெரிவித்த பல்வேறு கருத்துக் கணிப்பில், தி.மு.க., குறைந்தபட்சம், 29 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக, 37 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, தி.மு.க.,வுக்கு, 40க்கு 40 என்ற, 100 சதவீத வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என, கருத்துக் கணிப்புகள் பிரதிபலித்திருப்பது, தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தோல்வி அடையும் தொகுதிகளை சேர்ந்த மாவட்டச் செயலர்கள், பொறுப்பு அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும் என்பதால், அவர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வாறு வட்டாரங்கள் கூறின.

அடுத்தது என்ன?: ஆலோசித்த பழனிசாமி


தி.மு.க.,வில் மா.செ.,க்கள் மற்றும் அமைச்சர்களை தேர்தல் பணிக்கு விரட்டி பணியாற்ற வைத்தது போல, அ.தி.மு.க.,விலும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை தேர்தலுக்கு முன் ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விரட்டினார், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி.
ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 25 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்; இல்லையேல் பதவியை பறிக்கத் தயங்க மாட்டேன் என கூறி, நிர்வாகிகளை அதிர வைத்தார் பழனிசாமி. இதனால், துவக்கத்தில் தேர்தல் பணியில் இருந்த அ.தி.மு.க., - மா.செ.,க்களும், மாவட்ட, மாநில நிர்வாகிகளும் களம் இறங்கி வேகமாக பணியாற்றினர்.
ஆனால், தேர்தல் கருத்துக்கணிப்புகள் அந்தளவுக்கு அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இல்லாததால், கட்சியினர் மீது பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளார். பெரிய அளவில் வெற்றி கிடைக்காத சூழலில், அடுத்தடுத்து எப்படி செயல்படுவது என்பது குறித்து, நேற்று கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரோடு பழனிசாமி ஆலோசித்ததாக கட்சி வட்டாரங்கள் கூறின.



- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us