ரோடுக்கு கோடு போடும் டெண்டர்; எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் வழக்கு
ரோடுக்கு கோடு போடும் டெண்டர்; எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் வழக்கு
ரோடுக்கு கோடு போடும் டெண்டர்; எதிர்த்து ஒப்பந்ததாரர்கள் வழக்கு
ADDED : ஜூன் 23, 2024 04:15 AM

புதிதாக ரோடுகள் போடும் போதும், ரோடுகளை சீரமைக்கும் போதும், ரோட்டின் எல்லையையும், நடுப்பகுதியையும் பிரித்துக் காட்டுவதற்கு, வெள்ளைக் கோடுகள் போடப்படுகின்றன.
ரோடு ஒப்பந்த பணிகளின் ஒரு பகுதியாகவே இந்த பணிகள் நடந்து வந்தன. ஆனால், சில ஆண்டுகளாக இதற்காக, உள்ளாட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகள் சார்பில், தனியாக டெண்டர் விடப்படுகிறது.
ரோடுகளில் கோடு போடுவது மற்றும் ஒளிரும் விளக்குகள் பொருத்துவதற்கும் சேர்த்து, 'ரோடு மார்க்கிங் அண்டு ரோடு பர்னிச்சர்' என்ற பெயரில் விடப்படும் இந்த டெண்டர்களில் முறைகேடு நடப்பதாகவும், அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், தென் மண்டல கான்ட்ராக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது.
இது தொடர்பாக, அந்தச் சங்கம் சார்பில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், 'மூன்றாண்டுகளில், ரோடு மார்க்கிங்கிற்கு தனியாக டெண்டர் விட்டதில், அரசுக்கு 1,200 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.டெண்டர் தொகையில், 50 சதவீதம் லாபம் வைத்து தொகை நிர்ணயிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும், '100 கோடி மதிப்பிலான ரோடு பணிகளை மேற்கொள்ள, 25 கோடி மதிப்பிலான இயந்திரங்களை கொண்ட நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், இந்த பணிகளுக்கு, 60 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் போதும் என, திடீர் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தரம் குறைகிறது' என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், இந்த டெண்டர் பணியை எடுத்துள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
- நமது நிருபர் -