Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ புதிய அலுவலகத்தில் குடியேறுகிறது காங்கிரஸ்

புதிய அலுவலகத்தில் குடியேறுகிறது காங்கிரஸ்

புதிய அலுவலகத்தில் குடியேறுகிறது காங்கிரஸ்

புதிய அலுவலகத்தில் குடியேறுகிறது காங்கிரஸ்

ADDED : ஜூலை 30, 2024 03:53 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு, கட்டுமானப்பணிகள் எல்லாம் ஒருவழியாக முடிவுக்கு வந்து விட்ட நிலையில், தன் புதிய தலைமை அலுவலகத்தில், வரும் சுதந்திர தினத்தன்று காங்கிரஸ் கட்சி குடியேறி, அங்கிருந்து அனைத்து நடவடிக்கைகளையும் துவங்கவுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு டில்லியில் கட்சி அலுவலகம் அமைப்பதற்கான நிலத்தை, கடந்த 2006ல் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் வழங்கியது.

அதன்படி, தீனதயாள் உபாத்யாயா சாலையில் தங்களுக்கு கிடைத்த நிலத்தில், 2016ல் கட்டுமானத்தை பா.ஜ., துவக்கி, 2018ல் முடித்து, புதிய அலுவலகத்தில் பா.ஜ., குடியேறியது.

அதே காலகட்டத்தில் நிலம் பெற்ற காங்கிரசால் அது முடியாமல் போனது. தேர்தல் தோல்விகள், நிதிப் பற்றாக்குறை காரணமாக, கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

பின் 2016ல், 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த கட்டடம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டன. 2018 நவம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டும், பணிகளை முடிக்க முடியவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக, பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று சமீபத்தில் தான் முடிவுக்கு வந்துள்ளது.

புதிய அலுவலகத்தில் வைபை, அண்டர்கிரவுண்ட் பார்க்கிங், கான்பரன்ஸ் ஹால், மருத்துவ அறை, சிறிய அளவிலான உணவகங்கள், விஷுவல் மீடியாக்களுக்கு என ஸ்டூடியோக்கள், நுாலகம், கட்சி நிர்வாகிகளுக்கான அறை, பத்திரிகையாளர் சந்திப்புக்கான ஹால் என பல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுஉள்ளன.

கட்டுமான பணியில் விருது பெற்ற ஹபீஸ் என்பவர் இந்த கட்டடத்தை வடிவமைத்துள்ளார். 21,008 சதுர அடி பரப்பளவில் இந்த கட்டடத்தின் தரைத்தளம் அமைந்துள்ளது. ராகுலின் அலுவலகம் 5வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல முறை திறப்பு விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டு, கட்டடப் பணிகள் முடிவடையாததால், திறப்பு விழா தள்ளிப் போனது. கட்டடப் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 15ல் திறப்பு விழாவை நடத்த முடிவாகியுள்ளது.

தற்போதுள்ள நம்பர் 24, அக்பர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 45 ஆண்டுகள், கட்சி நடவடிக்கைகள் நடைபெற்று வந்த நிலையில், அதை காலி செய்துவிட்டு, புதிய அலுவலகத்திற்கு காங்கிரஸ் கட்சி குடியேற உள்ளது.

பா.ஜ., அலுவலகம் அமைந்துள்ள அதே சாலையில், காங்., புதிய அலுவலகமும் அமைந்து உள்ளதால், தீனதயாள் உபாத்யாயா சாலை என்ற முகவரியை தவிர்க்கும் வகையில், அருகிலுள்ள சாலையின் நுழைவாயிலை முகவரியாக கொண்டு இயங்க முடிவெடுத்துள்ளது.

அதன்படி, நம்பர் 9ஏ, கோட்லா சாலை என்ற புதிய முகவரியில் இனிமேல் காங்கிரஸ் தலைமை அலுவலகம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது டில்லி நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us