Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ பல மாநகராட்சிகளில் விரைவில் மேயர்கள் மாற்றம்!

பல மாநகராட்சிகளில் விரைவில் மேயர்கள் மாற்றம்!

பல மாநகராட்சிகளில் விரைவில் மேயர்கள் மாற்றம்!

பல மாநகராட்சிகளில் விரைவில் மேயர்கள் மாற்றம்!

ADDED : ஜூன் 16, 2024 01:42 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லோக்சபா தேர்தல் முடிந்து விட்டதால், தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் மேயர்கள் மாற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2022 ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., கூட்டணி பெருவாரியான உள்ளாட்சிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 21 மாநகராட்சிகளில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது; மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு துணை மேயர், நகராட்சித் தலைவர்கள் பதவிகள் பங்கிட்டுத் தரப்பட்டன.

மீதமுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தி.மு.க.,வைச் சேர்ந்த கவுன்சிலர்களே மேயர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதிலும் மிக முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று பெரிய மாநகராட்சிகளின் மேயர் பதவிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. அந்த மேயர் பதவிகளிலும் சீனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், புதுமுகங்களுக்கே பதவி வழங்கப்பட்டது.

கட்சியிலும், வயதிலும் அனுபவம் இல்லாதவர்களாக இருந்ததால், கட்சியில் சீனியர்களுக்கும், குறிப்பாக கட்சி நிர்வாகிகளுக்கும் அவர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.உதாரணமாக, கோவை மாவட்டத்தில் தி.மு.க., வுக்கு ஒரு எம்.எல்.ஏ.,வும் இல்லாத நிலையில், மேயராக நியமிக்கப்படும் நபர் பற்றி பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

கோவை மேயராக நியமிக்கப்படுபவர், மாநகர வளர்ச்சிக்கு உதவுவதோடு, கட்சியின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, கட்சி நிர்வாகிகளிடம் இருந்தது. ஆனால் கோவையில் புதிய மேயராக பொறுப்பேற்ற கல்பனா மீது, ஆரம்பத்திலிருந்தே விதவிதமான புகார்கள் குவிந்தன. அவருடைய செயல்பாடுகள், பேச்சுக்கள் குறித்த பல்வேறு வீடியோக்கள், ஆடியோக்கள் வெளியாகின.

பல இடங்களில், அவருக்கும், மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கும் இடையில் பகிரங்கமாகவே மோதல் நடந்தது. இவையனைத்தும் சமூக ஊடகங்கள் மூலமாக சந்தி சிரித்தன. அத்துடன், அவர் கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்பதே இல்லை என்று கட்சியின் கீழ் மட்ட நிர்வாகிகள், தலைமை வரையிலும் புகார்களைக் குவித்தனர்.

திருநெல்வேலியிலும், ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கும், மேயர்களுக்கும் இடையில் மோதல் முற்றி, அவரை மாற்றக்கோரி, தலைமைக்கு பெரும்பான்மை கவுன்சிலர்கள் கடிதமே கொடுத்து விட்டனர். இதேபோல, மேலும் சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் மேயர்கள் மற்றும் சேர்மன்களை மா்ற்ற வேண்டுமென்ற கோரிக்கை, நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது.

ஆனால் தேர்தலுக்கு முன்பாக, மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்களை மாற்றினால் அதுவே பெரும் சர்ச்சையாகும்; எதிர்க்கட்சியினர் விமர்சிக்க வழிவகுக்கும் என்று, தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் இவர்களின் தேர்தல் பணி குறித்தும் தலைமையால் ஆய்வு செய்யப்பட்டது.

இறுதியாக வழங்கப்பட்ட அந்த வாய்ப்பிலும் அவர்களில் பலர் சொதப்பியுள்ளனர். லோக்சபா தேர்தலின்போது, தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர்கள், பகிரங்கமாகவே கோவை மேயரை விமர்சித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கேற்ப, கோவை மாநகராட்சியில் பல வார்டுகளில், தி.மு.க.,வுக்கு மிகக் குறைவான ஓட்டுக்களே கிடைத்துள்ளன.

தேர்தலில் குறைவான ஓட்டுக்கள் வாங்கும் பகுதிகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்பே, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்திருந்தார். இப்போதும் வேட்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பகுதிகளிலேயே தி.மு.க., இரண்டாமிடம் பிடித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக வெற்றி பெற்றிருந்தாலும், இதே நிலை நீடித்தால், சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற முடியாது என்பதால், பல்வேறு மாநகராட்சிகளில் மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் விரைவில் மாற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க., நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது. புதிதாகப் பதவிகளைப் பிடிக்க, பலரும் காய் நகர்த்தும் வேலைகளும் துவங்கியுள்ளன.

தி.மு.க.,தலைமை முடிவால், யார் யாருடைய பதவிக்கு வேட்டு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

-நமது சிறப்பு நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us