Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ மஹாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநில தேர்தல்; நட்டா தலைமையிலேயே சந்திக்க பா.ஜ., முடிவு

மஹாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநில தேர்தல்; நட்டா தலைமையிலேயே சந்திக்க பா.ஜ., முடிவு

மஹாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநில தேர்தல்; நட்டா தலைமையிலேயே சந்திக்க பா.ஜ., முடிவு

மஹாராஷ்டிரா உள்ளிட்ட 3 மாநில தேர்தல்; நட்டா தலைமையிலேயே சந்திக்க பா.ஜ., முடிவு

ADDED : ஜூலை 21, 2024 12:07 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிவரை அதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில் நாடு முழுதும் நடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று, மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது.

பதவிக்காலம்


புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அக்கட்சி தேசிய தலைவர் நட்டா வின் பதவிக்காலம், கடந்த ஜனவரியுடன் நிறைவடைந்தது. அப்போது, லோக்சபா தேர்தலையொட்டி அவரது பதவிக்காலம் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறை, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் துவங்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதன்படி, நாடு முழுதும் அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை ஆகஸ்ட் 1 முதல், செப்டம்பர் 15ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பின், புதிதாக சேரும் உறுப்பினர்களை ஊக்கப்படுத்தும் நடைமுறை செப்டம்பர் 16 முதல் 30ம் தேதி வரை நடக்கும் எனவும், அவ்வாறு கட்சியில் இணைந்த உறுப்பினர்களின் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தும் நடைமுறை, அக்டோபர் 1 முதல் 15ம் தேதி வரை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அமைப்பு ரீதியில் கட்சியை பலப்படுத்தும் வகையில் பூத் கமிட்டிகளை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பா.ஜ., மாவட்ட தலைவர்களை தேர்வு செய்யும் நடைமுறை வரும் நவம்பர் 16 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.

மூன்று ஆண்டுகள்


அவ்வாறு தேர்வாகும் மாவட்ட தலைவர்கள், கட்சியின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்யும் நடைமுறை டிசம்பர் 1ம் தேதி முதல் துவங்கும் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாநில அளவிலான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், பா.ஜ.,வின் தேசிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறை அதிகாரப்பூர்வமாக துவங்கும் என கூறப்படுகிறது.

பா.ஜ.,வின் தேசிய மற்றும் மாநில கவுன்சில் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட உள்ள தேசிய தலைவர், அக்கட்சியில் 15 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பது அவசியம்.

அவ்வாறு, தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர், இருமுறை தலா மூன்று ஆண்டுகள் வரை அப்பதவியில் நீடிக்க முடியும்.

எனவே, இந்த ஆண்டு இறுதியில் தான் பா.ஜ.,வின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்புள்ளது. அதுவரை, அக்கட்சியின் தலைவராக நட்டா நீடிப்பார் என தெரிகிறது.

இதன்படி, வரும் அக்டோபரில் நடைபெற உள்ள ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்களையும், நட்டா தலைமையில் தான் பா.ஜ., சந்திக்க உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us