ரஷ்யாவிலிருந்து வர்த்தக வாய்ப்பை சுமந்து வரும் ரயில்
ரஷ்யாவிலிருந்து வர்த்தக வாய்ப்பை சுமந்து வரும் ரயில்
ரஷ்யாவிலிருந்து வர்த்தக வாய்ப்பை சுமந்து வரும் ரயில்
UPDATED : ஜூன் 28, 2024 04:08 PM
ADDED : ஜூன் 28, 2024 02:32 AM

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மாஸ்கோ பயணத்திற்கு முன்னதாக, இந்தியாவுக்கு இரண்டு ரயில்களை அனுப்பியுள்ளது ரஷ்யா. இந்த இரண்டு ரயில்களும், இந்தியாவுக்கு நிலக்கரியை மட்டும் கொண்டு வரவில்லை; ஏராளமான வர்த்தக வாய்ப்புகளையும் சேர்த்தே கொண்டு வருகின்றன.
முதல் முறையாக சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் வாயிலாக, ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு ரயில்களில் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது.
காலம் காலமாக உலக வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் வழித்தடத்துக்கு மாற்றாக, கடந்த 2000ம் ஆண்டு ரஷ்யா, ஈரான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து துவங்கியது தான், ஐ.என்.எஸ்.டி.சி., எனும் சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து வழித்தடம்.
வரப்பிரசாதம்
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து மும்பை துறைமுகம் வரை, கிட்டத்தட்ட 7,200 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த வழித்தடம், ரயில், சாலை மற்றும் கடல்வழிப் போக்குவரத்தை உள்ளடக்கியது.
தற்போது முதல் முறையாக, இந்த வழித்தடம் வாயிலாக, இந்தியாவுக்கு இரண்டு ரயில்களில் நிலக்கரியை ரஷ்யா அனுப்பியுள்ளது.
உக்ரைன் போரினால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதன் காரணமாக, வழக்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொண்டு வந்த ரஷ்யா தற்போது ஆசிய நாடுகள் பக்கம் பார்வையை திருப்பி உள்ளது.
மேலும், பொருளாதாரத் தடைகளால், கடல் வழிப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஐ.என்.எஸ்.டி.சி., வழித்தடம் ரஷ்யாவுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது. எனினும், இந்த வழித்தடம் அவ்வப்போது ஏதேனும் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதால், இதற்கான மாற்று வழித்தடத்தின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் கூட இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக, சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் பயணிப்பது பாதிக்கப்பட்டது.
என்ன நன்மைகள்?
இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த வழித்தடம் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. முதலில், சீனாவின் 'பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ்' எனும் பி.ஆர்.ஐ., திட்டத்துக்கு மாற்றாக, இந்தியா இந்த வழித்தடத்தை பயன்படுத்த நினைக்கிறது.
இந்த வழித்தடம், இந்திய வர்த்தகர்களுக்கு, மத்திய ஆசிய நாடுகள் மட்டுமல்லாமல்; ஈரான், ரஷ்யா, அஜர்பைஜான் மற்றும் பால்டிக் மற்றும் நார்டிக் நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ள வழிவகுக்கும்.
சமீபத்தில், ஈரானின் சாபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகள் கையாள்வதற்கு இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தம், இதற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
சூயஸ் கால்வாயை பயன்படுத்தும்போது, இந்தியா - ரஷ்யா இடையேயான சரக்கு போக்குவரத்துக்கான நேரம் 45 நாட்கள்.
ஆனால், ஐ.என்.எஸ்.டி.சி., வழித்தடம் இந்த நேரத்தை 25 நாட்களாக, கணிசமாக குறைக்கிறது. மேலும், சரக்கு போக்குவரத்து செலவையும் கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைக்கிறது.
உலகளவில் நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவி வருவதால், கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்டவற்றின் வினியோகம் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. விலையும் உயர்கிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட இப்பொருட்களின் இறக்குமதியை சார்ந்திருக்கும் நாடுகள், கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
அந்த வகையில், இந்த வழித்தடம், அதிக எண்ணெய் வளங்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளிலிருந்து எளிதாகவும், குறைந்த விலையிலும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வழி வகுக்கிறது. மேலும், மின்சார உற்பத்தி மற்றும் உலோக தயாரிப்புக்கு தேவைப்படும் நிலக்கரியை, மலிவான விலையில் வழங்கும் ரஷ்யாவிலிருந்து, விரைவாக இறக்குமதி செய்ய வகை செய்கிறது.
பயன்பெறும் துறைகள்
இந்த புதிய வழித்தடத்தால் இந்தியாவின் பல துறைகளில் வர்த்தகம் பெருகும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம், மருந்து, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், ஜவுளி, விவசாயம், ஆபரணங்கள் போன்ற துறைகளில் வர்த்தகம் அதிகரிக்கும்.