3 மாதத்தில் 2 புலிகள் பலி: வனத்துறை விசாரணை
3 மாதத்தில் 2 புலிகள் பலி: வனத்துறை விசாரணை
3 மாதத்தில் 2 புலிகள் பலி: வனத்துறை விசாரணை
UPDATED : ஜூன் 17, 2024 12:50 AM
ADDED : ஜூன் 17, 2024 12:20 AM

சென்னை: தமிழகத்தில், மூன்று மாதங்களில், இரண்டு பெண் புலிகள் இறந்தது குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
காடுகளில் உயிரியல் சூழல் சீராக அமைய, புலிகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. புலிகள் வசிக்கும் பகுதியில், அனைத்து வகை வன உயிரினங்களும் வாழ்வதற்கான சூழலியல் தன்மை இருக்கும் என்று கருதப்படுகிறது. தமிழகத்தில், 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 306 புலிகள் இருப்பதாக வனத்துறை அறிவித்தது.
இந்நிலையில், 2023ல் மட்டும் பல்வேறு சம்பவங்களில், 15 புலிகள் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சிறப்பு குழு அமைத்து விசாரித்தது. இயற்கையான காரணங்களால் தான் புலிகள் இறந்ததாக, தமிழக வனத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த ஏப்., 24ல், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், குலசேகரம் என்ற இடத்தில், வளர்ந்த நிலையில் பெண் புலி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதையும் வனத்துறை தெரிவிக்கவில்லை. தற்போது, கோவை சிறுமுகை வன சரகத்தில், உள்ளியூர் காப்புக்காட்டில், 9 வயது பெண் புலியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உடல் பாகங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால், வெளியாட்கள் நடமாட்டம் கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும், மூன்று மாதங்களில், இரண்டாவது முறையாக புலி இறந்துள்ளது. வாழிட பிரச்னையால், புலிகளுக்குள் சண்டை ஏற்பட்டு, இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிமுறைகளின்படி, வனத்துறை அதிகாரிகள் முழுமையான விசாரணையை துவக்கியுள்ளனர்.