
பலத்த சர்ச்சைகளுக்கிடையில் தனியாக வரும் மாமன்னன்
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், "தேவர் மகன்" படத்தைப் பற்றியும், அதில் வடிவேலு ஏற்று நடித்த இசக்கி கதாபாத்திரம் பற்றியும் பேசியது பலத்த சர்ச்சைகளை எற்படுத்தியது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கமல்ஹாசன் முன்னிலையிலேயே அவர் அப்படிப் பேசியது கமல் ரசிகர்களை கோபப்படுத்தியது. அதனால், அவர்கள் கடந்த சில தினங்களாக மாரி செல்வராஜை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
மாரி செல்வராஜ், கமல்ஹாசன், தேவர் மகன் என்ற விவாதம் அப்படியே சாதி பிரச்சினையாக, மோதலாக கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இந்தப் படத்தை வெளியிட சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. மதுரை உள்ளிட்ட இடங்களில் படத்திற்கு எதிராக போஸ்டர்களும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தணிக்கையான படத்தை வெளியீட்டிற்கு முன்பாகவே இப்படியிருக்கும், அப்படியிருக்கும் என எதிர்ப்பைக் கிளப்புவது சரியா என மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவும் குரல் எழுந்தது. இத்தனை சர்ச்சைகளுக்கிடையில் நாளை எந்த போட்டியுமின்றி இப்படம் வெளியாக உள்ளது. வெளியான பின் சர்ச்சைகள் பெரிதாகுமா அல்லது சத்தமில்லாமல் போகுமா என சினிமா வட்டாரங்களும், அரசியல் வட்டாரங்களும் ஒருவித தயக்கத்துடனேயே இருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!