Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சறுக்கல் ஏன்? அலசி ஆராய்ந்த கல்வித்துறை அதிகாரிகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சறுக்கல் ஏன்? அலசி ஆராய்ந்த கல்வித்துறை அதிகாரிகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சறுக்கல் ஏன்? அலசி ஆராய்ந்த கல்வித்துறை அதிகாரிகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சறுக்கல் ஏன்? அலசி ஆராய்ந்த கல்வித்துறை அதிகாரிகள்

UPDATED : மே 20, 2024 12:00 AMADDED : மே 20, 2024 10:05 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:
ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் வருகைப்பதிவு சரிவு ஆகியவையே, பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் தோல்விக்கு காரணம் என, ஆய்வுக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், கடந்த 6ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவும், 10ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் வெளியாகின. பிளஸ்2 தேர்வில், 97.45 சதவீத தேர்ச்சியுடன், மாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 92.38 சதவீத தேர்ச்சியுடன், 21 ம் இடத்தை நோக்கி பின்னுக்குச்சென்றுவிட்டது.

பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவியர் 607 பேர் தேர்ச்சி பெறாதநிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,301 பேர் தேர்ச்சி பெறாதது, கல்வித்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்ததற்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, சரி செய்யவேண்டிய பொறுப்பு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.

இந்நிலையில், பொதுத்தேர்வு ரிசல்ட் தொடர்பான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமைவகித்தார். அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் தங்கள் பள்ளியின் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம்; தோல்வி அடைந்த மாணவர் மொத்த எண்ணிக்கை; பாடம் வாரியாக தோல்வி அடைந்தோர் எண்ணிக்கை குறித்து தெரிவித்தனர்.

ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் வருகை பதிவு குறைவு, சில மாணவர்கள் சிறப்பு வகுப்புகளில் சரிவர பங்கேற்கவில்லை என, தேர்ச்சி விகிதம் குறைவுக்கு பல்வேறு காரணங்களை தலைமை ஆசிரியர்கள் அடுக்கினர். தேர்ச்சி விகிதம் சரிந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர், டோஸ் விட்டார்.

தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா பேசுகையில், பிளஸ் 2 முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்காக கல்லுாரிகளில் இணைந்துவிட்டனரா என்பதை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தவேண்டும்.

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், மீண்டும் தேர்வெழுதி வெற்றிபெற கைகொடுக்கவேண்டும். வரும் கல்வியாண்டில், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான பணிகளை திறம்பட மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us