Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சமூகத்துக்கு பயன்படாத நுால்களை மொழிபெயர்க்க கூடாது: மொழிபெயர்ப்பாளர்கள் அறிவுறுத்தல்

சமூகத்துக்கு பயன்படாத நுால்களை மொழிபெயர்க்க கூடாது: மொழிபெயர்ப்பாளர்கள் அறிவுறுத்தல்

சமூகத்துக்கு பயன்படாத நுால்களை மொழிபெயர்க்க கூடாது: மொழிபெயர்ப்பாளர்கள் அறிவுறுத்தல்

சமூகத்துக்கு பயன்படாத நுால்களை மொழிபெயர்க்க கூடாது: மொழிபெயர்ப்பாளர்கள் அறிவுறுத்தல்

UPDATED : மார் 04, 2025 12:00 AMADDED : மார் 04, 2025 10:44 AM


Google News
Latest Tamil News
சென்னை :
தமிழ் சமூகத்துக்கு பயன்படாத நுால்களை, ஒரு போதும் மொழி பெயர்க்கக் கூடாது என, சாகித்ய அகாடமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் கூறினர்.

சென்னை பல்கலையில் உள்ள அரபி, பெர்சியன், உருது மொழி துறைகள் சார்பில், தற்கால இலக்கிய சூழலில், மொழிபெயர்ப்பில் ஏற்படும் சவால்கள்' என்ற தலைப்பில், கடந்த வாரம் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை கவிஞர் வைரமுத்து துவக்கி வைத்தார்.

மொழிபெயர்ப்பாளர்கள் இந்திரன், கண்ணையன் தட்சிணாமூர்த்தி, வெங்கட சவ்ப்ராய நாயகர், நல்லதம்பி, ஜெயஸ்ரீ, ஹயாத் பாஷா, ஜாஹீர் ஹுசைன், கார்த்திகை பாண்டியன், ஷண்முக விமல்குமார் ஆகியோர் தங்களின் அனுபவங்களை பகிர்ந்தனர்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர் இந்திரன் பேசியதாவது:

மொழிபெயர்ப்பு என்பது, மொழியை பெயர்ப்பது அல்ல; பண்பாட்டை மொழிபெயர்ப்பது என்பதை மொழி பெயர்ப்பாளர்கள் உணர வேண்டும். முக்கியமாக, மற்ற மொழிகளில் உள்ள படைப்புகள் எல்லாம் சிறந்தவை என்ற எண்ணத்துடன் அணுகக்கூடாது.

கருப்பு புத்தகம்


தற்கால தமிழ் சூழலுக்கு ஏற்றதாகவும், அதை படிப்பவர்களுக்கு ஏற்றத்தை உருவாக்குவதாகவும் அமைய வேண்டும். நான் பதின்பருவத்தில் இருந்த போது, அமெரிக்கன் சென்டர் கட்டப்பட்டது. அங்கிருந்த வசதிகளுக்காக படிக்கச் சென்றேன். அப்போது, 'கருப்பு புத்தகம்' என்ற புத்தகத்தை பார்த்தேன்.

அதன் அட்டை, தாள்கள் அனைத்தும் கருமை நிறத்தில் இருந்தன. எழுத்துக்கள் வெண்மையில் இருந்தன. கருப்பு எழுத்தாளர்களால் எழுதப்பட்ட அந்த நுாலில், கருப்பு ஏசுநாதர் என்ற கவிதை இருந்தது.

அதில், ஏசுவே நீங்கள் மீண்டும் திரும்பி வருவீர்கள் என்கின்றனர். அப்படி வந்தால், மீண்டும் கருப்பராக பிறக்காதீர். அப்படி வந்தால், மீண்டும் சிலுவையில் அறையப்படுவீர். நீங்கள் நுழைய முடியாத தேவாலயங்களை, வெள்ளையர்கள் கட்டி வைத்திருக்கின்றனர் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதுதான், நான் அகராதி உதவியுடன் மொழிபெயர்த்த முதல் கவிதை. தொடர்ந்து, எனக்கு நெருக்கமான படைப்புகளை மட்டுமே மொழிபெயர்க்கிறேன். பணத்துக்காக என்னால் மொழிபெயர்க்க முடியாது.

ஒரு இலக்கியத்தை மொழிபெயர்க்கும் முன், அசல் மொழியின் தன்மை, அது பேசும் மக்களின் பண்பாடு, மண் சார்ந்த விஷயங்கள், பழமொழிகள் உள்ளிட்டவற்றை அறிய வேண்டும். தொடர் வாசிப்பு மிகவும் முக்கியம்.

இல்லாவிட்டால், வெறும் வார்த்தை பெயர்ப்பாக மாறி, அபத்தமாக இருக்கும். மேலும், மொழி பெயர்ப்பாளர் தன் மேட்டிமை தனத்தை காட்டுவதாக இல்லாமல், கடைசி வாசகனுக்கும் புரியும் வகையிலான எளிமையான மொழிபெயர்ப்பை தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாழ்வியல் புரியும்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ பேசியதாவது:



நான் கேரளாவில் இருந்து புலம் பெயர்ந்து, தமிழகத்தின் வடஆற்காடு மாவட்டத்தில் வசித்து வருபவள். தமிழர்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர்ந்து தலைமுறை கடந்து வாழ்கின்றனர். அவர்கள், அந்தந்த மாநில மொழி, பழக்க வழக்கங்களை அறிந்தவர்களாக இருப்பர்.

அதேபோல, ஓசூரில் உள்ளோர் கன்னடம் தெரிந்தவராகவும், திருத்தணியில் உள்ளோர் தெலுங்கு அறிந்தவராகவும், கோவை, தேனி, வால்பாறையில் உள்ளோர் மலையாளம் அறிந்தவர்களாகவும் இருப்பர்.

அவர்களுக்கு அருகில் உள்ள மாநில மக்களின் வாழ்வியல் புரியும். அவர்களில் இலக்கிய வாசிப்பு உள்ளோர், அந்த மொழிகளில் உள்ள படைப்புகளை தமிழுக்கும், தமிழில் உள்ளவற்றை அந்த மொழிக்கும் மொழியாக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்கும்.

அதேசமயம், தமிழ் சூழலுக்கு பயனில்லாதவற்றை மொழிபெயர்த்தால், பத்தோடு பதினொன்றாக கடந்து போய்விடும்.

நான், மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்த இலக்கியங்களின் எழுத்தாளர்கள், இப்போதும் உள்ளதால், அவர்களிடம் அனுமதி பெற்று, அதன் சூழல்கள் குறித்து ஆலோசித்து மொழிபெயர்ப்பது வழக்கம்.

தமிழகத்தின் வடமாவட்டங்கள், திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் வட்டார வழக்கு சொற்கள் முற்றிலுமாக மாறும்.

அதேபோல, கேரளாவின் திருச்சூர், கண்ணனுார் பகுதிகளிலும் மொழி வழக்கு மாறும். அதையெல்லாம் அறிந்து, நமக்கு உகந்தவற்றை மட்டுமே மொழிபெயர்ப்பது நல்லது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், சென்னை பல்கலை பதிவாளர் ஏழுமலை, பாடநுால் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன், பேராசிரியர்கள் ய.மணிகண்டன், கோ.பழனி, ஏகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us