Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வடமாநில தொழிலாளர்களுக்கு கொங்கு தமிழில் பேச பயிற்சி: கோவை கலெக்டர் புது திட்டம்

வடமாநில தொழிலாளர்களுக்கு கொங்கு தமிழில் பேச பயிற்சி: கோவை கலெக்டர் புது திட்டம்

வடமாநில தொழிலாளர்களுக்கு கொங்கு தமிழில் பேச பயிற்சி: கோவை கலெக்டர் புது திட்டம்

வடமாநில தொழிலாளர்களுக்கு கொங்கு தமிழில் பேச பயிற்சி: கோவை கலெக்டர் புது திட்டம்

UPDATED : ஆக 29, 2024 12:00 AMADDED : ஆக 29, 2024 09:08 AM


Google News
Latest Tamil News
கோவை: கோவையிலுள்ள தொழிற்சாலைகள், ஓட்டல்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் உட்பட பல நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் பேசுவதை கேட்க சகிக்க முடியவில்லை. மரியாதை தமிழுக்கு பெயர் போன நம் கோவையில், அவர்களுக்கும் தமிழில் தெளிவாக பேச, சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து ள்ளது, கோவை மாவட்ட நிர்வாகம்.

தமிழகத்தில் அதிக அளவிலான புலம் பெயர் தொழிலாளர்களை கொண்ட மாவட்டங்கள் வரிசையில், கோவை மாவட்டம் இரண்டாவது இடம் வகிக்கிறது. கோவை மாவட்ட தொழிலாளர்துறை கணக்குப்படி, சுமார் 10,00,000 வட மாநில புலம் பெயர் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

பணியிடத்தில் சிறப்பான பங்களிப்பை அளிக்க, புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வது அவசியம். மொழி தெரியாததால் பணிபுரியும் இடத்தில் குளறுபடிகள் ஏற்படுகின்றன.

அதோடு, பிறரிடம் பேசும் போது மரியாதையுடன் எப்படி பேசவேண்டும் என்பது தெரியாமல், புழக்கத்திலுள்ள சில தேவையற்ற வார்த்தைகளை, தெரியாமல் பயன்படுத்தி விடுகின்றனர். இதனால் பலரும் கோபமடைந்து, பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சரியான புரிதல் ஏற்படுவதற்கும், பிரச்னைகளை களைவதற்கும் பணிபுரியும் இடத்தில் சூழலை முழுமையாக புரிந்து கொள்வதற்கு, தமிழில் சரளமாக பேச வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்த கோவை கலெக்டர் கிராந்திகுமார், வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழில் பேச்சு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

அதற்காக, தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவையின் கீழ் செயல்படும் தமிழ் இணையகல்விக்கழகம், இந்தி மொழி வாயிலாக, பேச்சுத் தமிழ் பயிற்சியை வழங்குகிறது. இது, தமிழக தமிழ் பரப்புரைக் கழகத்தின் கீழ், கோவையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவர்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும், 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை சேர்ந்த மேலாளர்கள், நிர்வாகிகளை அழைத்து, கலெக்டர் சிறப்புக்கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்தினார்.

அதில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குனர் காந்தி, தொழிலாளர் நல உதவி கமிஷனர் (அமலாக்கம்), காயத்ரி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:

கோவையில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள், எளிதாக தமிழில் பேச வேண்டும். அவர்களுக்குள் சரியான புரிதல் ஏற்பட வேண்டும். அப்போதுதான், அவர்கள் செய்யும் பணி எளிமையாகும். தகவல் தொடர்பு சுலபமாகும். உற்பத்தியில் பாதிப்பு வராது. இப்பயிற்சி, விரைவில் அந்தந்த தொழிற்சாலை வளாகங்களிலேயே, பணி நேரம் அல்லாத நேரத்தில் இணைய வழியில் நடைபெறும்.

இவ்வாறு, கலெக்டர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us