Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ திருப்பூர் தமிழாசிரியர்கள் திருக்குறள் வினாடி வினா போட்டியில் முதலிடம்

திருப்பூர் தமிழாசிரியர்கள் திருக்குறள் வினாடி வினா போட்டியில் முதலிடம்

திருப்பூர் தமிழாசிரியர்கள் திருக்குறள் வினாடி வினா போட்டியில் முதலிடம்

திருப்பூர் தமிழாசிரியர்கள் திருக்குறள் வினாடி வினா போட்டியில் முதலிடம்

UPDATED : பிப் 03, 2025 12:00 AMADDED : பிப் 03, 2025 07:34 AM


Google News
Latest Tamil News
விருதுநகர்:
உலக பொதுமறையென போற்றப்படும் திருக்குறள் வடித்த வள்ளுவன் சிலை, குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கிறது. அதன் வெள்ளி விழாவை, பல்வேறு வகைகளில் கொண்டாடியது தமிழக அரசு. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி, சமீபத்தில், விருதுநகரில் நடந்தது.

இதன் முதல்நிலை போட்டி, தமிழகத்தில் உள்ள, 38 மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. இவற்றில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 152 குழுவைச் சேர்ந்த, 456 பேர் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற தமிழாசிரியர்கள் கணேசன்(கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி), ஆனந்த்(கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி), சக்திவேல் (கேத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளி) ஆகியோர் அடங்கிய குழுவினர், முதலிடம் பிடித்து, 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு பெற்றனர்.

புதிய அனுபவம்


மாவட்ட அளவிலான போட்டியில் தனித்தனியாக தான் பங்கேற்றோம். பின், குழு அமைத்த போது, ஏற்கனவே எங்களுக்குள் அறிமுகம் இருந்தது என்பதால், குழுவாக இணைந்தோம்; நாங்கள் மூவரும் தமிழாசிரியர்கள் என்பதும், சாதகமான சூழலை ஏற்படுத்தியது. திரைப்படப் பாடலை குறிப்பிட்டு, அந்தக் காட்சியை திருக்குறளுடன் பொருத்தி பார்க்கும் வினாவை கேட்டிருந்தனர்.

சில ஆளுமைகளை குறிப்பிட்டு, அவர்களின் திறமையை, திருக்குறளுடன் ஒப்பிட்டு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அரசு பஸ்களில் திருக்குறள் எழுதி வைக்கும் திட்டத்தை கொண்டு வந்தது யார், திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் குறித்த விவரம், என திருக்குறளின் பெருமை, அதன் புகழ் பரப்பும் திட்டங்கள் என பல்வேறு விஷயங்கள் கேட்கப்பட்டிருந்தன. இதில் பங்கேற்றது புதிய அனுபவமாக இருந்தது.

வாழ்வை செம்மையாக்கும்


மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்தறன் ஆகுல நீர பிற. மனம் துாய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தை தவிர வேறொன்றுமில்லை என்பதே இக்குறளின் பொருள். இந்த ஒரு குறள், நம் வாழ்வை செம்மைப்படுத்தும். திருக்குறளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம் என்பதை இன்றயை இளைய தலைமுறை உணர வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

கலாம் படம் வைக்கவும்


திருக்குறள் வழி சிந்தனையால்செயற்கைக்கால் உருவாக்கிய கலாம்போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சியை, ஒரு முறை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பார்க்கிறார். அந்த செயற்கை கால், 4 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. அதனால், குழந்தைகள் நடக்க, ஓட சிரமப்படுகின்றனர் என்பதை உணர்ந்து, ஏவுகணை தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ஒரு உபகரணத்தின் உதவியுடன் செயற்கைக்கால் தயாரித்தார். அதன் எடை, வெறும், 400 கிராம் தான். அதை பொருத்திக் கொண்டவர்கள் எளிதாக ஓடவும், நடக்கவும் செய்தனர்.அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்; தந்நோய்போல் போற்றாக் கடை என்ற குறள் வழியாக, அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன? எனக் கேட்கிறார் வள்ளுவர். இந்த குறள் தான், இப்படியொரு சிந்தனையை ஏற்படுத்தியது என்றார் கலாம் என, குறளின் பெருமையை கூறினர், மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்ற திருப்பூர் மாவட்ட ஆசிரியர்கள்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us