Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வானமே எல்லை: ஸ்டார்ட் அப்கள் பெருகுகின்றன: இ-காமர்ஸ் துறை அசத்துகிறது: தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு

வானமே எல்லை: ஸ்டார்ட் அப்கள் பெருகுகின்றன: இ-காமர்ஸ் துறை அசத்துகிறது: தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு

வானமே எல்லை: ஸ்டார்ட் அப்கள் பெருகுகின்றன: இ-காமர்ஸ் துறை அசத்துகிறது: தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு

வானமே எல்லை: ஸ்டார்ட் அப்கள் பெருகுகின்றன: இ-காமர்ஸ் துறை அசத்துகிறது: தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு

UPDATED : டிச 23, 2024 12:00 AMADDED : டிச 23, 2024 10:44 AM


Google News
திருப்பூர்:
புதிய சிந்தனைகள், நவீனத் தொழில்நுட்பங்களின் கலவையாக ஸ்டார்ட் அப்கள் மலர்கின்றன. இதில், கோலோச்சுபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள்.
இதேபோல், இ - காமர்ஸ் துறையின் வளர்ச்சியும் அளப்பரியதாக உள்ளது. பெரு நகரங்களில் மட்டுமே முத்திரை பதிக்க முடியும் என்றல்லாது, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் சாதிக்க வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன.
பின்னலாடைத்துறையிலும், புதிய ஸ்டார்ட் அப்களும், இ-காமர்ஸ் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக கால்பதிக்கத் துவங்கியிருக்கின்றன. இதை முன்னிறுத்தி, திருப்பூரில் நடந்த கருத்தரங்கில் கூறப்பட்ட இனிப்பான தகவல்: ஸ்டார்ட் அப்கள் துவங்க ஆர்வம் பெருகி வருகிறது; திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 350 ஸ்டார்ட் அப்கள் துவங்கப்பட்டுள்ளன. இ காமர்ஸ் மூலம் பின்னலாடைத் தொழிலிலும் தொழில்முனைவோர் பலரும் முத்திரை பதிக்கத் துவங்கியிருக்கின்றனர்.

ஆம். வாய்ப்புகளுக்கு வானமே எல்லை

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்( சைமா) மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், இ-காம் ஸ்கேல் -2 என்ற தொழில் வழிகாட்டி கருத்தரங்கு நேற்று நடந்தது. சைமா அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பொறுப்பாளர் குரு சங்கர் வரவேற்றார்.

ஸ்டார்ட் அப் அலுவலகம்

திருப்பூரில் திறக்க வேண்டும்



கருத்தரங்கை துவக்கிவைத்து பேசிய சைமா துணை தலைவர் பாலச்சந்தர்: ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தால், அரசு வழிகாட்டுதலை பெற்று, பல்வேறு புதிய தொழில்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகள், தொழிலாக வடிவம் பெறுகின்றன. திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் ரீதியாக, பல்வேறு டிஜிட்டல் தொழில் வாய்ப்புகளும் உள்ளன. எதிர்காலத்தில், இ-காமர்ஸ் மூலம் எளிதாக சம்பாதிக்கும் வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. தமிழக அரசு, திருப்பூர் மாவட்டத்திலும், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்ட அலுவலகத்தை திறக்க முன்வர வேண்டும்.

10 கோடி லிட்டர்

தண்ணீர் மறுசுழற்சி



சுதாகர், இணைச்செயலாளர், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம்: உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' திட்டத்தை திருப்பூரில் செயல்படுத்தி வருகிறோம். தினமும், 10 கோடி லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது. இது, தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 50 சதவீதம் மக்களுக்கான தினசரி குடிநீர் தேவையாகும். திருப்பூரின் தேவையை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, மின்சக்தி உற்பத்தி செய்கிறோம். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பூர், பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி என்ற அங்கீகாரம் பெறப்போகிறது.

ஆன்லைன் வர்த்தகம்

பொருளீட்டுதல் எளிது



மணிகண்டன், உறுப்பினர், சைமா: திருப்பூர் பின்னலாடை தொழிலில், புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட வேண்டும். குறிப்பாக, எவ்வித முதலீடும் இல்லாமல், ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருள் ஈட்டுகின்றனர். இனி வரும் தொழில்துறையினரும், ஆன்லைன் வர்த்தகம் செய்யவும், பிராண்டிங் முறையில் ஆடைகளை முன்னிலைப்படுத்தவும் திட்டமிட வேண்டும்.

தொழிலுடன் சமூக சேவை

திருப்பூர் டுகெதர் திட்டம்



யங் இண்டியன்ஸ் அமைப்பு பிரதிநிதி நேதாஜி: அரசு மற்றும் அரசு சாரா பொதுநல அமைப்புகள் மூலம், தொழில் நகரில் பல்வேறு விழிப்புணர்வு இயக்கம் நடத்தி வருகிறோம். குழந்தைகள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், தொழில்துறையினர், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு தொழில்நுட்பம் உட்பட, சமுதாய சேவை திட்டங்களையும், யங் இண்டியன்ஸ் அமைப்பு செயல்படுத்தி வருகிறது. இந்தாண்டு, திருப்பூர் டுகெதர் என்ற நோக்கத்துடன் திட்டத்தை துவக்கியிருக்கிறோம்.

வழிகாட்டி அமைப்பை

அணுகுவதே சிறப்பு



ஆடிட்டர் ராமநாதன்: இ-காமர்ஸ் தளத்துக்கு இனிமேல் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இ-காமர்ஸ் குறித்த அனைத்து சேவைகளும், வழிகாட்டுதலும், ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், இ-காம் 2 ஸ்கேன் என்ற வழிகாட்டி கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, ஆன்லைன் வியாபாரத்தில் நுழைய விரும்புவோர், இத்தகைய வழிகாட்டி அமைப்புகளை அணுகினால் போதும்; தேவையான வழிகாட்டுதல் கிடைக்கும்.

வழிகாட்டி கருத்தரங்கில், பெட்டிக்கடை வணிக தள நிறுவனர் ஆகாஷ், முன்னணி பிராண்டிங் மற்றும் வணிக ஆலோசகர்கள் பிரவீன்ராஜ், சஞ்சய் விஜயகுமார், பிரஹத் ரூபன் ஆகியோர், பவர் பாயின்ட் வாயிலாக விளக்கினர். தொழில்நெறி வழிகாட்டி கருத்தரங்கில், திருப்பூர், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழில்முனைவோர், இளைஞர்கள் பங்கேற்றனர்.

ஸ்டார்ட் அப் தமிழ்நாடு, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்( சைமா) மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், இ-காம் ஸ்கேல் -2 என்ற தொழில் வழிகாட்டி கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் பங்கேற்றோர்.

ஸ்டார்ட் அப் துவங்க அலுவலர்கள் உதவி


குரு சங்கர், ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பு அலுவலர்: புதிய சிந்தனையுடன், புதிய ஐடியாக்களை தொழிலாக உருவாக்க, ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்ட அலுவலர்கள் உதவி செய்வார்கள். நிதி உதவி, தொழில் வழிகாட்டி உதவிகளும் அளித்து வருகிறோம். ஈரோடு மண்டலத்தில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கடந்த, 2021ம் ஆண்டு, 'ஸ்டார்ட் அப்'கள் துவங்குவது மிக குறைவாக இருந்தது; தற்போது அதிகரித்துள்ளது. இதுவரை, இருமாவட்டங்களில், 350க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்கள் துவங்கப்பட்டுள்ளன.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us