Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ உயர்ந்த லட்சியத்தை தீர்மானியுங்கள்

உயர்ந்த லட்சியத்தை தீர்மானியுங்கள்

உயர்ந்த லட்சியத்தை தீர்மானியுங்கள்

உயர்ந்த லட்சியத்தை தீர்மானியுங்கள்

UPDATED : ஜூலை 15, 2024 12:00 AMADDED : ஜூலை 15, 2024 10:09 AM


Google News
Latest Tamil News
வாழ்வில் உயர் இலட்சியங்களை தீர்மானிக்க வேண்டும் அந்த லட்சியங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கை சாதனைகளுக்கு வழி வகுக்கிறது என்பது உறுதியான ஒன்று என்கிறார் ஹெலன் கெல்லர்.

டாக்டர் அப்துல்கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தபோது இந்தியத் தலைமை 2020 இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் சிலரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். கலாமின் வழக்கமான கேள்வி பதில் பாணியில் தான் உரையாடல் நடந்து கொண்டிருந்தது.

மாணவர்களை நோக்கி கலாம் கேட்டார், நீங்களெல்லாம் என்னவாக விரும்புகிறீர்கள்? என்று... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை சொல்ல, பார்வையற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவரான ஸ்ரீகாந்த் பட்டென்று சொன்னார், 'ஐயா நான் நாட்டின் குடியரசுத் தலைவராக வர விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறினால் நான்தான் இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வரலாற்றில் பதிவு செய்யப்படுவேன்'' என்றார்.

சுற்றியிருப்பவர்கள் திடுக்கிட கலாம் புன்னகைத்தார். அம்மானவனின் வித்தியாசமான விருப்பத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டார்.'ஸ்ரீகாந்த் போல மிகப் பெரிய இலக்குகளை அடைய ஆசைப்படுங்கள், சிறிய இலக்குகளை தீர்மானித்துக் கொள்ளுவது தான் குற்றம் என்றார். 'உங்களுடைய கனவு ஒருநாள் நிஜமாக ஆசைப்படுகிறேன். இதற்காக நீங்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்' என்று ஸ்ரீகாந்திடம் டாக்டர் கலாம் கேட்டுக் கொண்டார்.

யார் இந்த ஸ்ரீகாந்த்? அவரைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறவியிலேயே பார்வையற்றவரான ஸ்ரீகாந்த் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு விவசாய கூலித் தொழிலாளியின் மகனாக, வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். பிறக்கும் போதே பார்வையில்லை. எனினும், 'மிகக் கடுமையாக உழைக்க வேண்டு'ம் என்ற கலாமின் அறிவுரை ஸ்ரீகாந்துக்கு ஒவ்வொரு நொடியும் நினைவில் இருந்து கொண்டே இருந்தது. பார்வையற்ற ஸ்ரீகாந்துக்கு விவேகானந்தரும், கலாமும் இரண்டு கண்கள். கிரிக்கெட் விளையாடினார், செஸ் விளையாடினார், பார்வையற்றவர்களுக்கு எதெல்லாம் சவாலோ அந்த சவால்களை தனது செவிகளைக் கொண்டு வென்றார். தேசிய செஸ் வீரராக தன்னை உயர்த்திக்கொண்டார். மாநில அளவிலான பார்வையற்றோர் பிரிவுக்கான கிரிக்கெட் வீரராகவும் களமிறங்கினார்.

தொடர்ந்து, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற எம்.ஐ.டி., கல்வி நிறுவனத்திற்கு பொறியியல் படிக்க விண்ணப்பித்தார். ஸ்ரீகாந்தின் விண்ணப்பத்தை கண்ட எம்.ஐ.டி., நிர்வாகம் அவரை வாரி அணைத்துக் கொண்டது. கட்டணமெல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க இலவசமாக படிக்கலாம் என்று உலக அளவில் புகழ்பெற்ற அந்த தொழிற்கல்வி நிறுவனம் அறிவித்தது. தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஸ்ரீகாந்த் கற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

படித்து முடித்ததும் அமெரிக்காவில் உள்ள ஜெனரல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எங்களிடம் பணிக்கு வாருங்கள் பல லட்சங்களை சம்பளமாக தருகிறேன் என்று இவருக்கு அழைப்பு விடுத்தது.

எனக்கு லட்சங்கள் முக்கியமில்லை, லட்சியமே முக்கியம் என்று சொல்லி இந்தியா திரும்பினார். மறுசுழற்சி முறையில் பயன்படுத்தக்கூடிய பேக்கேஜிங் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை ஒரு தகர கொட்டகையில் எட்டு தொழிலாளர்கள் மற்றும் மூன்று சிறிய மெஷின்களுடன் ஆரம்பித்தார். தனது நிர்வாகத் திறமையால் விடாமுயற்சியால் அந்த நிறுவனம் நான்கு பெரிய நிறுவனமாக ஐம்பது கோடி ரூபாய் வருமானம் தரக்கூடிய நிறுவனமாக வளர்ந்தது. அதில் எழுபது சதவீதம் தொழிலாளர்களை மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தினார். ஸ்ரீகாந்த் இப்போது ஒரு மிகச் சிறந்த முன்னணி தொழில்முனைவோர்.
தனக்கு கிடைத்த கல்வியை மிகச்சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற்று, இளம் வயதில் ஒரு சிறந்த தொழில் முனைவோராக, தன்னம்பிக்கை பேச்சாளராக உருவாகி இன்றைய மாணவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார். எல்லாம் சரி கலாம் அவர்களிடம் சொன்ன அந்த ஜனாதிபதிக் கனவு எப்போது என்று நினைவுபடுத்த அதற்கு ஸ்ரீகாந்த் சொல்கிறார் வயது என்ற ஒன்று இருக்கின்றது. அந்த வயதில் நிச்சயம் என்னை ஜனாதிபதியாக பார்ப்பீர்கள் என்கிறார் நம்பிக்கையுடன். என்னால் எதுவும் முடியும் என்று சொல்லும் ஸ்ரீகாந்த், ஒரு மாற்றுத்திறனாளியல்ல பலரை மாற்றும் திறனாளி என்று தான் சொல்ல வேண்டும்.

-பேராசிரியர், அ.முகமது அப்துல் காதர்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us