Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம்

பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம்

பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம்

பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம்

UPDATED : ஜன 19, 2025 12:00 AMADDED : ஜன 19, 2025 08:50 AM


Google News
பெங்களூரு:
பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் என்று கூறி பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆச்சார்யா பாடசாலா (ஏ.பி.எஸ்.,) பள்ளி மற்றும் கல்லூரியின் 90வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அவர், தாம் படித்த பள்ளி ஆண்டு விழாவுக்கு, வீடியோ பதிவு மூலம் நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் ரஜினி கூறியதாவது:


ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் எனது உயர்வுக்கு அடித்தளமாக அமைந்தது. எனது வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். கன்னட வழி வகுப்பில் படிக்கும்போது, நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். நான் 98 மதிப்பெண் எடுத்தேன். நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் என் அண்ணன் என்னை ஆங்கில வழி கல்விக்கு சேர்த்தார்.

கன்னட மொழி பள்ளியில் இருந்து ஆங்கில மொழி பள்ளிக்கு மாறிய போது படிப்பில் சிரமங்களை எதிர்கொண்டேன். மன உளைச்சலுக்கு ஆளானேன். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், எனது சிரமத்தைப் புரிந்து கொண்டு பாடம் நடத்தினார்கள். 10ம் வகுப்பில் குறைவான மதிப்பெண்கள் மட்டுமே பெற்றேன். சில காரணங்களால் கல்லூரியைத் தொடர முடியவில்லை.

பள்ளி நாட்களில் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் கலந்து கொண்டேன். போட்டிகளில் பங்கேற்பதற்கு முன், வகுப்பில் பலவிதமான கதைகளைச் சொல்வேன். நான் பார்த்த திரைப்படங்களை நண்பர்கள் முன்னிலையில் நடித்துக் காட்டுவது வழக்கம். இது எங்கள் ஆசிரியர்களுக்கும் தெரியும். அதை கவனித்த அவர்கள், போட்டிகளில், குறிப்பாக நாடகத்தில் பங்கேற்க ஊக்கம் அளித்தனர்.

பள்ளியில் ஏற்பாடு செய்திருந்த, சாண்டாலா என்ற நாடகத்தில் முதல் முறையாக நடித்தேன். அதனை மறக்க முடியாது. அந்த நாடகத்துக்குப் பரிசு கிடைத்தது. கேடயத்தை வென்றோம். எனக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இப்போது என்னால் முடிந்தவரை குழந்தைகளை மகிழ்விக்க முயற்சிக்கிறேன்.

இதற்கெல்லாம் காரணம் ஏ.பி.எஸ்., பள்ளி மற்றும் கல்லூரி தான். அதுதான் பெருமை. நாங்கள் அங்கு கழித்த நாட்கள், நாங்கள் விளையாடிய விளையாட்டுகள், மறக்க முடியாது.

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us