Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி.,யில் ரங்கோலி பயிற்சி பட்டறை

ஐ.ஐ.டி.,யில் ரங்கோலி பயிற்சி பட்டறை

ஐ.ஐ.டி.,யில் ரங்கோலி பயிற்சி பட்டறை

ஐ.ஐ.டி.,யில் ரங்கோலி பயிற்சி பட்டறை

UPDATED : செப் 23, 2024 12:00 AMADDED : செப் 23, 2024 08:15 AM


Google News
சென்னை:
சம்ஸ்கார் பாரதியுடன் சென்னை ஐ.ஐ.டி., இணைந்து நடத்தும் தேசிய அளவிலான மூன்று நாள் ரங்கோலி பயிற்சிப் பட்டறை நேற்று முன்தினம் துவங்கியது.

சம்ஸ்கார் பாரதி என்ற அமைப்பு, பாரம்பரிய கலைகளான நடனம், இசை, நாடகம், சங்கீதம், ரங்கோலி, புவி அலங்காரம் உள்ளிட்ட பல கலைகளை இளம் தலைமுறையிடம் பழமை மாறாமல் கொண்டு சேர்ப்பதில் சேவையாற்றி வருகிறது. சம்ஸ்கார் பாரதியின் அமைப்பு, அனைத்து மாநிலத்திலும் செயல்பட்டு வருகிறது.

இதன் தமிழக அமைப்பும், சென்னை ஐ.ஐ.டி.,யும் இணைந்து, தேசிய அளவிலான மூன்றுநாள் ரங்கோலி பயிற்சிப் பட்டறையை நேற்று முன்தினம் துவங்கியது.

இதில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் சம்ஸ்கார் பாரதி உறுப்பினர்கள் 150க்கும் மேற்பட்டோர் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.,யை சேர்ந்த 52 மாணவ - மாணவியரும் பங்கேற்றுள்ளனர்.

துவக்க விழாவில், சம்ஸ்கார் பாரதியின் தமிழக மாநில பொதுச் செயலாளர் இருளப்பன் வரவேற்று, விருந்தினர்களை கவுரவித்தார். மாநில தலைவர் தாக்ஷாயணி ராமச்சந்திரன் தலைமை உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சென்னை, ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசினார்.

ரங்கோலி பயிற்சியாளரும், அகில பாரதிய புவி அலங்கார நிபுணருமான ரகுராஜ் தேஷ்பாண்டே கூறியதாவது:


கோலம் என்பது பழங்கால தமிழர்களுக்கு சொந்தமானது. இந்த கலை தென்மாநிலங்களில் இருந்து பரவியது. மகாராஷ்டிராவில் ரங்கோலி, மேற்கு வங்கத்தில் அல்பேனா, கன்னடத்தில் ஹசே, மிதிலாவில் அரிப்பான் எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை மண், மணல், அரிசி மாவு, செம்மண், பளிங்கு கற்களை உடைத்த துாள் உள்ளிட்ட பொருட்களால் கோலமிடப்படுகிறது. புள்ளிக்கோலம், மாக்கோலம், இழைக்கோலம், கம்பிக்கோலம் என பலவகை உள்ளன. சாதாரணமாக இரட்டை விரல் பயன்படுத்தி கோலமிடுவது வழக்கம்.

பயிற்சியுடன், பல்வேறு மாநிலங்களின் கோலத்தின் மகத்துவம், அதன் வாயிலாக உடல் நலத்தை, ஆன்மிகத்தையும் பெறுவது குறித்தும் விளக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us