Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜாதி பெயரை தவறாக குறிப்பிட்ட மாணவியின் மனு தள்ளுபடி

ஜாதி பெயரை தவறாக குறிப்பிட்ட மாணவியின் மனு தள்ளுபடி

ஜாதி பெயரை தவறாக குறிப்பிட்ட மாணவியின் மனு தள்ளுபடி

ஜாதி பெயரை தவறாக குறிப்பிட்ட மாணவியின் மனு தள்ளுபடி

UPDATED : ஜன 02, 2025 12:00 AMADDED : ஜன 02, 2025 12:38 PM


Google News
பெங்களூரு:
பி.ஜி., நீட் தேர்வுக்காக ஜாதி பெயரை தவறாக குறிப்பிட்டதாகக் கூறி தாக்கல் செய்த எம்.பி.பி.எஸ்., மாணவியின் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெங்களூரு ராஜிவ் காந்தி சுகாதார பல்கலைக்கழகத்தில், 2023 மார்ச்சில், எம்.பி.பி.எஸ்., முடித்தவர் பிரேரனா.

இவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், 2024 டிச., 5ல் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:

எம்.பி.பி.எஸ்., முடித்த நான், 2024ல் நடத்தப்பட்ட பி.ஜி., நீட் எனும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற்றுள்ளேன்.

தவறு

இந்த தேர்வுக்காக, நான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தபோது, ஜாதி என்ற இடத்தில், என் ஜாதியான பிற்பட்டோர் 3 ஏ - ஒக்கலிகர் என குறிப்பிடாமல், 'பொது' என்று எழுதிவிட்டேன். இதை தாமதமாக உணர்ந்த நான், கர்நாடக தேர்வு ஆணையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதற்குள், பி.ஜி, சி.இ.டி., எனும் முதுகலை பொது நுழைவுத் தேர்வு கவுன்சலிங்கிற்கான தேதி நிர்ணயித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, என் ஜாதி பெயரை மாற்ற அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு, நீதிபதிகள் அனு சிவராமன், உமேஷ் அடிகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

கல்வி பாதிப்பு

மாணவி தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், மாணவியின் கவனக்குறைவால், தவறாக பதிவு செய்த ஜாதி பெயரை திருத்த அனுமதிக்க வேண்டும். மேலும், இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் அவரின் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஜாதி சான்றிதழைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில் மாணவியின் கல்வி ஓராண்டு பாதிக்கப்படும், என்றார்.

அரசு மற்றும் கர்நாடக தேர்வு ஆணையம் சார்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், இரண்டாம் கட்ட கவுன்சலிங்கிற்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணி ஏற்கனவே முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் அடுத்த கவுன்சலிங் துவங்க உள்ளது. மாணவியின் மனுவை ஏற்பதன் மூலம், ஒட்டுமொத்த கவுன்சிலிங் நடவடிக்கை பாதிக்கப்படும். எனவே, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்றார்.

நம்ப முடியவில்லை
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

பி.ஜி., நீட் கவுன்சலிங், டிச., 6 முதல் 17 ம் தேதி வரை நடப்பது விண்ணப்பதாரருக்கு தெரியும். ஆனாலும், டிச., 5ம் தேதி தான், 'விண்ணப்பத்தில் தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன்' என்று மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரின் இந்த வாதம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.

அத்துடன் பி.ஜி., நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பு, அரசின் உரிய துறையிடம் பிற்படுத்தப்பட்டோர் ஜாதி சான்றிதழை அவர் பெற்றுள்ளார். எனவே, விண்ணப்பத்தில் தவறுதலாக குறிப்பிட்டார் என்பதை ஏற்க முடியாது. இதனால் அவரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us