Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீட் தேர்வில் இயற்பியல் மட்டுமே கடினம்: தேர்ச்சியாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

நீட் தேர்வில் இயற்பியல் மட்டுமே கடினம்: தேர்ச்சியாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

நீட் தேர்வில் இயற்பியல் மட்டுமே கடினம்: தேர்ச்சியாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

நீட் தேர்வில் இயற்பியல் மட்டுமே கடினம்: தேர்ச்சியாளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

UPDATED : மே 06, 2024 12:00 AMADDED : மே 06, 2024 10:05 AM


Google News
Latest Tamil News
சென்னை:
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, நீட் தேர்வு நேற்று நாடு முழுதும் நடந்தது. இயற்பியல் தவிர, மற்ற பாட கேள்விகள் எளிதாக இருந்ததாக, மாணவ - மாணவியர் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தகுதி மற்றும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், வரும் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது.

நாடு முழுதும், 557 நகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில், 24 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில், 30க்கும் மேற்பட்ட நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில், 1.55 லட்சம் பேர் பங்கேற்க ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

சென்னையில், 36 தேர்வு மையங்களில், 24,058 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தில், 12,730 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

கட்டுப்பாடுகள்
பகல், 2:00 மணி முதல் மாலை, 5:20 மணி வரை தேர்வு நடந்தது. காலை, 11:00 மணி முதல், பகல், 1:30 மணி வரை, தேர்வு மையங்களுக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கமான ஆடை, ஆபரண கட்டுப்பாடுகளுடன், தேர்வு மையங்களில் மெட்டல் டிடெக்டர் வாயிலான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

சில இடங்களில் மாணவர்களை, சீக்கிரமாக தேர்வு மையங்களுக்குள் அனுமதிப்பதால், அவர்கள் மாலை வரையிலும், பசியுடன் இருக்க வேண்டிய நிலை உள்ளதாக, பெற்றோர் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிலையில், தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், 'தேர்வு மையங்களில் பெரிய அளவில் கெடுபிடி இல்லை. மாணவ - மாணவியருக்கு தேர்வு மைய ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள், எந்தவித நெருக்கடியும் தரவில்லை என்றனர்.

எளிதாக இருந்தது

வினாத்தாளை பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட எளிமையானதாக இருந்துள்ளது. மொத்தம் உள்ள, 720 மதிப்பெண்களில், 360 மதிப்பெண்களுக்கு தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து எளிதான கேள்விகள் இடம் பெற்றதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

வேதியியல் பாடவினாக்களும் எளிமையாக இருந்ததாகவும், இயற்பியலில் மட்டும், கணக்கீடுகள் கொண்ட கேள்விகள், அதிகம் இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்ட புத்தகங்களை படித்து, தயாரான மாணவர்களுக்கு, இந்த தேர்வில் முழு மதிப்பெண் பெறும் வகையில் வினாத்தாள் இருந்ததாகவும், அதனால், தரவரிசையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, போட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், நீட் பயிற்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us