Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய மகளிர் ஆணைய குழுவினர் விசாரணை: 14 பேருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன்

தேசிய மகளிர் ஆணைய குழுவினர் விசாரணை: 14 பேருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன்

தேசிய மகளிர் ஆணைய குழுவினர் விசாரணை: 14 பேருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன்

தேசிய மகளிர் ஆணைய குழுவினர் விசாரணை: 14 பேருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன்

UPDATED : டிச 31, 2024 12:00 AMADDED : டிச 31, 2024 12:13 PM


Google News
சென்னை:
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணைய உண்மை கண்டறியும் குழுவினர் முதற்கட்ட விசாரணை முடித்து, கவர்னர் ரவியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கடந்த, 23ம் தேதி இரவு, 7:45 மணியளவில், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்.

இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. சம்பவம் தொடர்பாக விசாரிக்க, இரு நபர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவையும் அமைத்துள்ளது.

அக்குழுவில் இடம் பெற்றுள்ள, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர், சென்னையில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.

சிசிடிவி செயல்பாடு

நேற்று அண்ணா பல்கலை வளாகத்தில், எத்தனை, சிசிடிவிக்கள் உள்ளன; அவற்றில் எத்தனை செயல்பாட்டில் உள்ளன மற்றும் அங்குள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்தினர்.

மாணவி பாலியல் வன்முறை விவகாரத்தில் கைதான, கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன், எந்த நுழைவு வாயில் வழியாக வளாகத்திற்குள் சென்றார் என்பது குறித்தும் விசாரித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை வெளியில் தெரியும்படி செய்தது யார் என்பது குறித்தும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையை முடித்துள்ள உண்மை கண்டறியும் குழுவினர், பல்கலை வேந்தரான கவர்னர் ரவியை நேற்று மாலை சந்தித்து ஆலோசனை செய்தனர்.

இதற்கிடையில், உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர், மகளிர் ஆணைய குழுவினரை சந்தித்து, இந்த வழக்கில் இதுவரை நடந்த விசாரணை விபரங்களை எடுத்துரைத்தனர்.

எப்.ஐ.ஆர்.,

அதேபோல, மாணவி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புக்யா சினேகா பிரியா, ஐய்மன் ஜமால், பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்துள்ளது.

இக்குழுவினரும் விசாரணையை துவக்கி உள்ளனர். கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து, மாணவி பாலியல் வன்முறை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுள்ளனர். கைதான ஞானசேகரன் பின்னணி குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

மேலும், மாணவி பாலியல் வன்முறை தொடர்பான எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்த, 14 பேருக்கு சம்மன் அனுப்பி, விசாரிக்க உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us