Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மதுரை எய்ம்ஸ் பணிகள் 18 மாதங்களில் முடியும்: செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் உறுதி

மதுரை எய்ம்ஸ் பணிகள் 18 மாதங்களில் முடியும்: செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் உறுதி

மதுரை எய்ம்ஸ் பணிகள் 18 மாதங்களில் முடியும்: செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் உறுதி

மதுரை எய்ம்ஸ் பணிகள் 18 மாதங்களில் முடியும்: செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் உறுதி

UPDATED : அக் 20, 2024 12:00 AMADDED : அக் 20, 2024 08:47 AM


Google News
Latest Tamil News
மதுரை:
திட்டமிட்டபடி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கான முதற்கட்ட பணிகள் 18 மாதங்களில் முடியும், என மதுரை எய்ம்ஸ் செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் தெரிவித்தார்.

மதுரை, தோப்பூரில், 221 ஏக்கர் பரப்பளவில் 2023 ஆக., 17ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட போது, எல் அண்டு டி நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என, 2024 மே 10ல் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில், மே 20ல் கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது.

எல் அண்டு டி நிறுவனம், அதிகாரப்பூர்வமாக கட்டுமான பணிகளை துவங்கியது. கட்டுமானத்தின் மொத்த திட்ட மதிப்பீடு 2,021 கோடி ரூபாய்.

முதற்கட்டமாக மருத்துவக்கல்லுாரி, அவசர சிகிச்சை பிரிவு, உள், வெளி நோயாளிகளுக்கான வார்டு, மாணவர்களுக்கான விடுதிகளை 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் மொத்த கட்டுமான பணிகளும் 33 மாதங்களில் முடிக்கப்படும். இதில், 2 லட்சத்து, 31,782 சதுர மீட்டர் பரப்பளவில் 42 பிரிவு கட்டடங்களாக கட்டுமானம் நடைபெறும்.

கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை குறித்து மதுரையில் எய்ம்ஸ் செயல் இயக்குனர் ஹனுமந்தராவ் கூறியதாவது:


டெண்டர் வெளியிடும் போதே குறிப்பிடப்பட்டது போல முதற்கட்டமாக விடுதி மற்றும் வகுப்பறை கட்டுமான பணிகள், 18 மாதங்களில் நிறைவு பெறும்; 2025 டிச.,ல் முதல்கட்ட பணி முடிந்த பின் எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கான மாணவர்கள் சேர்க்கை நேரடியாக இங்கு நடைபெறும்.

முதற்கட்ட நிலையில், 150 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தயாராகி வருகிறது. மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வசதியாக இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், மகப்பேறு உட்பட அனைத்து நோய் சார்ந்த துறைகளும் அமைக்கப்படும்.

இரண்டாம் கட்டத்தில், 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக மாறும்போது, மதுரை அரசு மருத்துவமனையை போல சிறப்பு மருத்துவமனையாக செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us