Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறமே தாரக மந்திரமாய் மூன்று சான்றோர்!

அறமே தாரக மந்திரமாய் மூன்று சான்றோர்!

அறமே தாரக மந்திரமாய் மூன்று சான்றோர்!

அறமே தாரக மந்திரமாய் மூன்று சான்றோர்!

UPDATED : பிப் 11, 2024 12:00 AMADDED : பிப் 11, 2024 09:38 AM


Google News
திருப்பூர்:
வாழ்ந்தவர் கோடி… மறைந்தவர் கோடி… ஆனால், சமூக சிந்தனையோடு, மனித குலத்தை உயர்த்த பாடுபட்டோர் மட்டுமே, மக்கள் மனதில், காலம் கடந்து நிலைத்து நிற்கின்றனர்.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவிநாசிலிங்கம் செட்டியார், உடுமலை நாராயண கவி, பழனிசாமி புலவர் உள்ளிட்டோர், மக்களால் இன்றளவும் கொண்டாடப்படுகின்றனர்.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கில், இம்மூன்று பழம் பெரும் தமிழறிஞர்களின் சிறப்புகள் குறித்து, கவிஞர்கள் பேசினர்.பன்முகத் தன்மையாளர் அவிநாசிலிங்கம் செட்டியார்
அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்நிலை கல்வி நிறுவன உதவி பேராசிரியர் குருஞானாம்பிகா பேசியதாவது:
அவிநாசிலிங்கம் செட்டியார், உடுமலை நாராயண கவி, பழனிசாமி புலவர் ஆகியோரெல்லாம், அறத்தின் வழியே வாழ்ந்து, அறத்தால் சிந்தித்து, அறத்தையே தாரக மந்திரமாக கொண்டு வாழ்ந்தவர்கள். அவர்கள் செய்த செயல்களாலேயே, இன்றைக்கும் நிலைத்து நிற்கின்றனர்.ஒரு வீட்டில் பெண் படித்திருந்தால், அடுத்தத தலைமுறைக்கும் கல்வி கிடைக்கும். அந்த நோக்கத்தில், வீட்டைவிட்டு பெண்கள் வெளியேவராத காலத்திலேயே, பெண்களுக்கு உயர் கல்வி வேண்டும் என நினைத்தவர், அவிநாசிலிங்கம் கல்வி நிறுவனம், இன்றளவும் அவர் காட்டிய அந்த வழியிலேயே பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த மண்ணில் பிறந்த அவிநாசிலிங்கம் செட்டியார். செல்வச்செழிப்பான வீட்டில் பிறந்த பிள்ளையிடம் இருந்த சமூகப்பார்வை, போராட்ட குணத்தைப்பார்த்து அனைவரும் வியந்தனர்.சட்டம் பயின்றவர். ஆன்மிகம், கல்விப்பணி, தமிழுக்கு தொண்டு என, பன்முகத்தன்மை கொண்டனர். கல்வி அமைச்சராக இருந்து அளப்பெரிய தொண்டாற்றியுள்ளார்.இவ்வாறு, குருஞானாம்பிகா பேசினார்.புலவர் பழனிசாமியின் தமிழ்த்தொண்டு
கவிஞர் சிவதாசன் பேசுகையில், பழனிசாமி புலவர், தமிழாசிரியராக பணிபுரிந்தவர்; எனக்கும் அவர்தான் தமிழாசிரியர். ஏராளமான நுால்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கொங்குச் செல்வி என்கிற நுால், எல்லோராலும் போற்றப்படுகிறது. வறுமையில் வாடியபோதும், தமிழ் தொண்டாற்றியுள்ளார், என்றார்.உடுமலை நாராயணகவி கவிஞர் கண்ணன் பேசியதாவது:
உடுமலை நாராணய கவி, பத்தாயிரம் திரையிசை பாடல்கள் எழுதியுள்ளார். அவரது பாடல்கள், காலத்தை வென்று, இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. இனிமையும், நேர்மையும், சொல் திறமையும் படைத்த, தலைவணங்கா தைரியசாலி. உரை நடைக்கு மறைமலை; கவிதைக்கு, உடுமலை.அக்காலத்தில், திரைப்பட தயாரிப்பாளர்களெல்லாம், இவரிடம் பாடல் வரி கேட்டு நடையாய் நடந்துள்ளனர். கருணாநிதி எழுதிய பராசக்தி, மனோகரா படங்களுக்கும் பாட்டு எழுதியுள்ளார் நாராயணகவி. திரைப்பட பாடல்களில் அறிவை உட்புகுத்தி, மக்களை பண்பட வைத்துள்ளார், என்றார்.தமிழ் மொழிக்கும், இச் சமூகத்துக்கும் தொண்டாற்றிய பழம் பெரும் அறிஞர்கள் இன்னும் ஏராளமானோர் உள்ளனர். அவர்களது வாழ்க்கை வரலாறுகளையெல்லாம், இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கவேண்டும். சமூக வலைதளங்களின் பின்னலில் சிக்கியுள்ள எதிர்கால தலைமுறையினரை, சான்றோர் காட்டிய வழியில் பயணிக்கச் செய்யவேண்டும்.இவ்வாறு பேசினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us