Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அவிநாசிலிங்கம் செட்டியாரின் தேச பக்தி மிகுந்த வாழ்க்கை

அவிநாசிலிங்கம் செட்டியாரின் தேச பக்தி மிகுந்த வாழ்க்கை

அவிநாசிலிங்கம் செட்டியாரின் தேச பக்தி மிகுந்த வாழ்க்கை

அவிநாசிலிங்கம் செட்டியாரின் தேச பக்தி மிகுந்த வாழ்க்கை

UPDATED : ஜன 26, 2024 12:00 AMADDED : ஜன 26, 2024 12:16 PM


Google News
Latest Tamil News
ஒரு மனிதனுக்குள் இருக்கும் முழுமையை வெளிக் கொணர்தல், ஒவ்வொருவரும் உழைத்து, சம்பாதித்து தங்கள் சொந்தக் காலில் நிற்க சொல்லி தருதல்; உண்மை, சத்தியத்தில் துணிவுடன் இருத்தல் என்பது, மகாத்மா காந்தி வகுத்து தந்த ஆதாரக் கல்வியின் சாராம்சமாகும்.கடந்த, 1930ல், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா என்ற பள்ளியை ஸ்தாபித்த திருப்பூரைச் சேர்ந்த அவிநாசிலிங்கம் செட்டியார், தனது பள்ளியில் சிறுவர்களுக்கு இப்படியான கல்வியைத் தான் கற்றுக் கொடுத்தார். பள்ளி வயதுடைய சிறுவர்களுக்கு மட்டுமின்றி, உழைக்கும் வர்க்கத்தினரும் கல்வி கற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், பகல் நேரத்தில் வேலைக்கு செல்வோருக்கென, இரவுப் பள்ளிகள் நடத்தினார்.சுதந்திர போராட்ட வீரரும், காந்தியவாதியுமான அவிநாசிலிங்கம் செட்டியார், திருப்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். திருப்பூர் உயர்நிலைப்பள்ளி, கோவை, லண்டன் மிஷன் உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றவர். சென்னை பச்சையப்பன் கல்லுாரியில், 1923ல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக்கல்லுாரியில், 1925ல் பட்டம் பெற்றார்.ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தரிடம் மிகுந்து ஈடுபாடு கொண்டிருந்த அவர், துறவி போன்று எளிமையான வாழ்வு வாழ்ந்தார். தாய் நாட்டுக்காக தன் செல்வ செழிப்பான வாழ்க்கையை துறந்தார். கடந்த, 1930ல், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளியை தொடங்கினார். பின், பெரியநாயக்கன்பாளையத்தில், 300 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்துக்கு அப்பள்ளியை மாற்றினார்.இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தில் இணைந்து, ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் உள்ளிட்ட பேராட்டங்களில் பங்கேற்றுள்ளார். 1930 முதல், 1942 வரையிலான கால கட்டங்களில், நான்கு முறை சிறை சென்றுள்ளார். காங்., கட்சியில் இணைந்து செயலாற்றியுள்ளார்.ஹரிஜன, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டார். 1934ல், ஹரிஜன நல்வாழ்வு நிதிக்காக, நன்கொடை திரட்ட தமிழகம் வந்த காந்திடியடிகளிடம், 2.50 லட்சம் ரூபாய் நன்கொடை திரட்டிக் கொடுத்தார். விதவைகள் மறுமணத்துக்கு போராடினார்.முதன் முதலில், ஒரு ஹரிஜன மாணவனை கொண்டு, பள்ளி துவங்கியதால், மாணவர்களை சேர்க்க யாரும் முன்வராத நிலை இருந்ததாம். சமூகத்தின் இந்த புறக்கணிப்பை, தனது நலம் விரும்பிகள் பலரது உதவியால் உடைத்தெறிந்து, பல செயல் திட்டங்களை வகுத்து, அனைத்து சமுதாயத்தவர்க்கும் கல்வி வழங்கியிருக்கிறார்.கடந்த, 1957ல் பெண் கல்விக்காக கல்லுாரி ஒன்றை துவக்கினார். தற்போது, அவிநாசிலிங்கம் மனையியல் பல்கலை.,யாக அது வளர்ந்து நிற்கிறது. 1946ல் சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராக, மாகாண அமைச்சரவையில் கல்வியமைச்சராக இருந்துள்ளார். 1946ல், தமிழ் வளர்ச்சி கழகத்தை உருவாக்கினார். 1952ல், திருப்பூர் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 1958 முதல், 1964 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.இவரின் சேவைக்காக, 1970ல், இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர், விடுதலை போராட்ட வீரர், தமிழ் வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர், சிறந்த அரசியல்வாதி, தலைச்சிறந்த கல்வியாளர் எனப் பன்முக திறமை கொண்ட அவர், 1991, நவ., மாதம், தனது, 88 வயதில் காலமானார்.கல்விக்காக நிலங்களை தானம் தந்த வள்ளல்!அவிநாசிலிங்கம்செட்டியாரின் பெற்றோர், சுப்ரமணியசெட்டியார், தாய் பழனியம்மாள் ஆகியோரின் நினைவாக தான், திருப்பூரில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கும் கே.எஸ்.சி., உயர்நிலைப்பள்ளி, பழனியம்மாள் உயர்நிலை பள்ளி நிறுவ, தங்களது நிலத்தை தானமாக வழங்கி, சில கட்டடங்களையும் கட்டிக் கொடுத்துள்ளனர்.பங்களா ஸ்டாப்பில் செயல்படும், அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கிய நிலத்தில் தான், டி.எஸ்.கே., மகப்பேறு மருத்துவமனை, அவரது அண்ணன் கந்தசாமி செட்டியார் நினைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரிச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலைய கட்டடம் செயல்பட்ட நிலம், அவிநாசிலிங்கம் செட்டியாரின் மகன் மீனாட்சிசுந்தரம், தானமாக வழங்கியது.அவிநாசிலிங்கம் செட்டியாரின் பேரனும், மீனாட்சி சுந்தரத்தின் மகனுமான டாக்டர் ராஜேஷ் கூறுகையில், என் தாத்தா மற்றும் குடும்பத்தினர், கல்வி, மருத்துவத்துக்கு நிறைய சேவைகளை செய்துள்ளனர்; இந்த உதவிகள் தான் எங்கள் தலைமுறைக்கும் புண்ணியத்தை சேர்த்துக் கொடுத்திருப்பதாக கருதுகிறோம். இந்த குடியரசு தின நாளில், அவர்களது தியாகம், உதவியை போற்றுவதில் பெருமை கொள்கிறோம், என்றார்.






      Our Apps Available On




      Dinamalar

      Follow us