Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வன உயிரியல் படித்தவர்கள் இனி வனச்சரகர் ஆகலாம்

வன உயிரியல் படித்தவர்கள் இனி வனச்சரகர் ஆகலாம்

வன உயிரியல் படித்தவர்கள் இனி வனச்சரகர் ஆகலாம்

வன உயிரியல் படித்தவர்கள் இனி வனச்சரகர் ஆகலாம்

UPDATED : ஜன 12, 2024 12:00 AMADDED : ஜன 12, 2024 12:50 PM


Google News
சென்னை:
வன வளர்ப்பு மட்டுமின்றி, வன உயிரின உயிரியல் பட்டதாரிகளும், வனச்சரகர் உள்ளிட்ட பதவிகளுக்கு வருவதற்கான வாய்ப்பு, 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உருவாகியுள்ளது.வனத்துறையில் கள நிலையில் வனவர், வனகாவலர்களுக்கு அடுத்த நிலையில், வனச்சரகர் தான் அதிகாரத்தை செலுத்த முடியும். வனம் சார்ந்த குற்றங்களை தடுப்பதிலும், வன உயிரினங்களை பாதுகாப்பதிலும், அவரின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.இந்நிலையில், 1992ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அடிப்படையில், வனச்சரகர் பணிக்கு, வன வளர்ப்பு மற்றும் வன உயிரின உயிரியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 2010ல் அரசு பிறப்பித்த உத்தரவில், வன உயிரின உயிரியல் படிப்பு விடுபட்டது.இதனால், அடுத்தடுத்து நடத்த வனச்சரகர் தேர்வுகளில், வன வளர்ப்பு துறையில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே முன்னுரிமை பெற்றனர். வன உயிரியல் படித்தவர்கள் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து, தி நேச்சர் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
வனச்சரகர் பணியில் வன வளர்ப்பு போன்று, வன உயிரின உயிரியல் படிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. வன வளர்ப்பில் பட்டம் பெற்றவர்கள் இத்துறைக்கு வந்தால், வன உயிரினங்கள் தொடர்பான விஷயங்களில், முழுமையாக கவனம் செலுத்த முடியாது. எனவே, இரண்டு படிப்புக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும்.இது தொடர்பாக, 2010ல் அரசு பிறப்பித்த திருத்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்துள்ளது. இதனால், 1992ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை, வனத்துறை கடைப்பிடிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.வனத்துறையின் பணித்திறன் மேம்படும்!
வனச்சரகர் என்பவர், வன வளர்ப்பு பற்றி படித்தவராக மட்டும் இருந்தால், நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பிட்ட அளவுக்கு, வன உயிரியியல் படித்தவர்கள் இருக்க வேண்டும். அந்த வகையில், உயர் நீதிமன்ற தீர்ப்பு, சம நிலையை ஏற்படுத்துவதாக உள்ளது. இத்தீர்ப்பை அரசு அமல்படுத்தினால், வன உயிரின பட்டதாரிகளும், வனச்சரகர் உள்ளிட்ட பதவிகளுக்கு வர முடியும். இது, வனத்துறையின் பணி திறனை மேம்படுத்தும் என ஊட்டி அரசு கல்லுாரி வன உயிரின பிரிவு துறைத் தலைவர் பி.ராமகிருஷ்ணன் கூறினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us