புத்தகப்பை இல்லா நாட்கள் உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
புத்தகப்பை இல்லா நாட்கள் உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
புத்தகப்பை இல்லா நாட்கள் உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
UPDATED : ஜன 12, 2024 12:00 AM
ADDED : ஜன 12, 2024 12:33 PM
டேராடூன்: உத்தரகண்டில், பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் பொருட்டு, அனைத்து பள்ளிகளிலும், கல்வி ஆண்டுக்கு, 10 நாட்கள் புத்தகப்பை இல்லா நாளாக கடைப்பிடிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள துவக்கப் பள்ளிகளில், ஏற்கனவே புத்தகப்பை இல்லா நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது, இந்த திட்டம் மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, மாநில கல்வித் துறை அமைச்சர் தன் சிங் ராவத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:உத்தரகண்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளில், புத்தகப்பை இல்லா நாள் கடைப்பிடிக்கப்படும். இது, வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.இதன்படி, கல்வி ஆண்டுக்கு, 10 நாட்கள் புத்தகப்பை இல்லா நாளாக கடைப்பிடிக்கப்படும். தேசிய கல்விக் கொள்கை - 2020ன் கீழ் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தின் வாயிலாக மண்பாண்டங்கள், மர வேலை, தகவல் தொடர்பு திறன், இயற்கை பாதுகாப்பு, தையல், ரோபோட்டிக்ஸ் போன்றவை குறித்து, இந்த நாளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.பள்ளி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, படிப்பைத் தவிர மாணவர்களின் பிற திறமைகளையும் மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


