Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ தலைசிறந்த நாடுகளில் ஒன்றாகும் இந்தியா; துணை ஜனாதிபதி பெருமிதம்

தலைசிறந்த நாடுகளில் ஒன்றாகும் இந்தியா; துணை ஜனாதிபதி பெருமிதம்

தலைசிறந்த நாடுகளில் ஒன்றாகும் இந்தியா; துணை ஜனாதிபதி பெருமிதம்

தலைசிறந்த நாடுகளில் ஒன்றாகும் இந்தியா; துணை ஜனாதிபதி பெருமிதம்

UPDATED : மே 30, 2024 12:00 AMADDED : மே 30, 2024 10:25 AM


Google News
பெங்களூரு:
சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெறும் இந்த காலத்தில், இந்தியாவின் எழுச்சியை பார்க்கிறோம். இந்த எழுச்சியை தடுக்க முடியாது. விரைவில், நாம் தலை சிறந்த நாடுகளில் ஒன்றாக இருக்க போகிறோம், என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பெருமிதம் தெரிவித்தார்.
பெலகாவியில் நடந்த, தேசிய பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 18வது நிறுவன நாள் விழாவில், பங்கேற்று அவர் பேசியதாவது:

பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி துறையில், உலகமே இந்தியாவை நோக்கி பார்க்கிறது. எனவே மருத்துவ துறையில் நாட்டை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவது, விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களிடம் உள்ளது.
பாரம்பரிய மருத்துவம்
வருங்கால சந்ததியினருக்கு, பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாத்து வளர்க்க வேண்டும். நம் பாரம்பரிய மருத்துவ முறைகள், அறிவியல், தத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றின் சரியான கலவையை கொண்டு உள்ளன. மருத்துவம் மற்றும் மூலிகை செடிகளை வளர்க்க, கிராம பஞ்சாயத்துகள் முயற்சி செய்ய வேண்டும்.
ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி, யோகா ஆகிய மருத்துவ முறைகள், இந்தியாவின் பெருமை. இது நம் முன்னோர்களின் அறிவுக்கு சான்றாகும். தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில், பாரம்பரிய மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பட்டமளிப்பு விழா
இதையடுத்து பெலகாவியில் நடந்த கே.எல்.இ., பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார்.
பின், சிறப்பு விமானம் மூலம், பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம், கர்நாடக ராஜ்பவனுக்கு சென்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட் அளித்த மதிய விருந்தில் பங்கேற்றார். மாநில அரசு சார்பில், துணை முதல்வர் சிவகுமார், துணை ஜனாதிபதியை சந்தித்து வரவேற்றார்.
பின், துணை ஜனாதிபதியும், கவர்னரும், பெங்களூரு பழைய விமான நிலையத்தின் பின்புறம் உள்ள, என்.ஏ.எல்., எனும் தேசிய விண்வெளி ஆய்வகத்தின் பேலுார் மையத்துக்கு சென்றனர்.
என்.ஜி., விமானம்
என்.ஏ.எல்., சார்பில், சுயசார்பு திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஹன்சா என்.ஜி., விமானம் தரையிறங்கும் காட்சியை பார்த்தனர். பின், அந்த விமானத்தில், துணை ஜனாதிபதி தம்பதி அமர்ந்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து, என்.ஏ.எல்., ஆய்வகத்தில், உள்நாட்டில் அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு விமான பொருட் காட்சியை, துணை ஜனாதிபதி துவக்கி வைத்தார்.
இதில், அவர் பேசியதாவது:
சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு பெறும் இந்த காலத்தில், இந்தியாவின் எழுச்சியை பார்க்கிறோம். இந்த எழுச்சியை தடுக்க முடியாது. நம் உயர்வு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த எழுச்சியை உலகம் கவனித்து வருகிறது. விரைவில், நாம், தலை சிறந்த நாடுகளில் ஒன்றாக இருக்க போகிறோம்.
வேறு எந்த நாடும் செய்யாத அளவுக்கு, தொழில்நுட்பத்தில், முன்னேறி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐந்தாறு நாடுகள் மட்டுமே தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகின்றன.
இந்தியாவின் வளர்ச்சி
இயந்திர கற்றல், பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு, இணையதளம் என வெவ்வேறு தொழில்நுட்பங்களில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவின் வளர்ச்சி, உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ராணுவ தளவாடங்கள், விண்வெளி துறையில் சந்திராயன் - 3 போன்றவை சான்றாகும். இவ்வாறு அவர் பேசினார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறை செயலர் கலைசெல்வி உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின், துணை ஜனாதிபதி தம்பதி, சிறப்பு விமானம் மூலம் டில்லி புறப்பட்டனர். கவர்னர், மாநில தலைமை செயலர் ரஜ்னீஷ் கோயல், டி.ஜி.பி., அலோக் மோகன், பெங்., நகர மாவட்ட கலெக்டர் கே.தயானந்தா, போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா உட்பட உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us