Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ தற்காப்பு கலைகளில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடி: கவர்னர் ரவி பெருமிதம்

தற்காப்பு கலைகளில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடி: கவர்னர் ரவி பெருமிதம்

தற்காப்பு கலைகளில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடி: கவர்னர் ரவி பெருமிதம்

தற்காப்பு கலைகளில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடி: கவர்னர் ரவி பெருமிதம்

UPDATED : ஜூலை 08, 2024 12:00 AMADDED : ஜூலை 08, 2024 09:27 PM


Google News
சென்னை:
உலகில் உள்ள தற்காப்பு கலைகளுக்கு முன்னோடியாக நம் நாடு விளங்குகிறது என, கவர்னர் ரவி பேசினார்.
சென்னை கிண்டி, கவர்னர் மாளிகையில், எண்ணித் துணிக பாரம்பரிய தற்காப்பு கலை ஆசான்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், கவர்னர் ரவி பேசியதாவது:
பாரம்பரிய தற்காப்பு கலை, நம் முன்னோர்களால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமக்கு கற்றுத் தரப்பட்டது. தமிழ் கலாசாரம், தமிழ் பாரம்பரியம், கர்நாடக இசை, பரதநாட்டியம் போன்றவற்றுக்கு நாம் பெருமை கொள்வதை போல, நம் பாரம்பரிய தற்காப்பு கலைகளிலும் பெருமை கொள்ள வேண்டும். இந்த தற்காப்பு கலைகள், நம் ரிஷிகளால் நமக்கு தோற்றுவிக்கப்பட்டவை.
இவை, தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. ரிஷிகள், சித்தர்கள், ஆன்மிக முன்னோடிகள் அறிஞர்களாக மட்டுமின்றி, தற்காப்பு கலைகளிலும் சிறந்து விளங்கினர். அகத்திய முனிவர் கூட சிறந்த குருவாக இந்த கலைகளுக்கு விளங்கினார். உலகில் உள்ள பாரம்பரிய தற்காப்பு கலைகளுக்கு முன்னோடியாக நம் நாடு விளங்குகிறது. இக்கலைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு தோன்றியுள்ளன. சீனா, ஜப்பான், கொரியா என பல நாடுகளில் வெவ்வேறு வடிவில் தற்காப்பு கலைகள் உள்ளன. அவை அனைத்தும் இங்கிருந்து தான் சென்றன.
கடந்த 1,500 ஆண்டுகளுக்கு முன், பல்லவ வம்சத்தில் ஒரு அரசர் இருந்தார். அவர் இங்கிருந்து சென்று புத்த மதத்தை படித்தவர். அவர் தான் போதி தர்மர். அவர், சீனாவுக்கு சென்றதும் சீன ராஜ்ஜியங்கள் வரவேற்றன. அங்கு அவர் இளம் மாணவர்களுக்கு தற்காப்பு கலையையும், புத்த மதத்தையும் போதித்தார். இந்த மண்ணில் இருந்து சென்ற போதி தர்மரை பற்றி ஷாவோலின் கோவில்களின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் பாரம்பரிய தற்காப்பு கலைகளை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து, பள்ளி, கல்லுாரிகளில் கற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், உலக சிலம்பம் விளையாட்டு சங்கத்தின் பொதுச்செயலர் கீதா, நிறுவனர் சுதாகரன், தமிழக குத்து வரிசை விளையாட்டு சங்க நிறுவனர் கழுகுமலை சந்திரசேகர், உலக சிலம்பம் விளையாட்டு சங்க செயல் இயக்குனர் சித்தர் துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us