Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரியில் முறைகேடாக மருத்துவ சேர்க்கை தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு ரூ.50,000 அபராதம் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் முறைகேடாக மருத்துவ சேர்க்கை தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு ரூ.50,000 அபராதம் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் முறைகேடாக மருத்துவ சேர்க்கை தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு ரூ.50,000 அபராதம் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் முறைகேடாக மருத்துவ சேர்க்கை தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு ரூ.50,000 அபராதம் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

UPDATED : ஜன 24, 2025 12:00 AMADDED : ஜன 24, 2025 11:03 AM


Google News
புதுச்சேரி:
சென்டாக் மருத்துவ சீட்டுகளில் முறைகேடாக மாணவர்கள் சேர்க்கப்பட்ட வழக்கில் தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., காலியிடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த 2017-18ம் ஆண்டு சென்டாக் மூலம் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடந்தபோது, 1 சீட்டுக்கு 10 மாணவர்கள் என்ற அடிப்படையில் மாணவர்களின் பெயர் பட்டியலை தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு பரிந்துரையாக அனுப்பியது. அந்த பட்டியலில் உள்ள மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தியது.

ஆனால், தனியார் மருத்துவ கல்லுாரி நிர்வாகங்கள் சென்டாக் நிர்வாகம் அனுப்பிய 1க்கு - 10 - என்ற பட்டியலில் இல்லாத மாணவர்களை அதிக பணம் வாங்கி கொண்டு முறைகேடாக சேர்த்தனர்.

இது குறித்து, புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கத்தின் சார்பாக தேசிய மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ரவி, பிரியா ரவி, பஞ்சாபிகேன் ஆகியோர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறைகேடாக சேர்ந்த மாணவர்களை நீக்கி அந்த காலி இடங்களில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேசிய மருத்துவ கவுன்சில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல், பல முறை நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு காலம் தாழ்த்தி வந்தது.

இந்நிலையில், அண்மையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போதும் தேசிய மருத்துவ கவுன்சில், நிர்வாகம் மீண்டும் கால அவகாசம் கேட்டது.

இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமரன்ராமமூர்த்தி ஆகியோர் தேசிய மருத்துவ கவுன்சில் நிர்வாகத்திற்கு ரூ. 50 ஆயிரம் அதிரடியாக அபராதம் விதித்தனர்.

இத்தொகையை தமிழ்நாடு சட்டபணிகள் ஆணைய வங்கி கணக்கில் செலுத்தவும் உத்தரவிட்டனர். மேலும், அடுத்த மாதம் 14ம் தேதி அனைத்து நடவடிக்கையின் நகலை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us