Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ சராசரி மாணவர்களும் சாதிக்கலாம்

சராசரி மாணவர்களும் சாதிக்கலாம்

சராசரி மாணவர்களும் சாதிக்கலாம்

சராசரி மாணவர்களும் சாதிக்கலாம்

UPDATED : மே 16, 2024 12:00 AMADDED : மே 16, 2024 11:06 AM


Google News
Latest Tamil News
சமீபத்தில், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவ, மாணவியர்களின் அடுத்தகட்ட நகர்வு சரியான பாடப்பிரிவை தேர்வு செய்வதை நோக்கியே உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமின்றி, சராசரி மதிப்பெண் பெற்றவர்களுக்கும் ஏராளமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. அத்தகைய பாடப்பிரிவுகள் குறித்து இங்கே காண்போம்.

பி.எஸ்சி.,- நர்சிங் மற்றும் பி.பார்ம்.,:
பிளஸ் 2வில் அறிவியல் பாடப்பிரிவை எடுத்து குறைந்தது 45 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் சேரலாம். இத்தகைய 4 ஆண்டுகால படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. இந்த இரண்டு துறைகளிலும் டிப்ளமோ படிப்பும் வழங்கப்படுகிறது.

பி.பி.டி., -பிசியோதெரபி:

உடல் இயக்கத்தை சீர் செய்ய, மருந்துகளோடு சேர்த்து முடநீக்கியல் சிகிச்சையும் வழங்க கற்றுத்தரும் படிப்பாகும். செயல்முறை பயிற்சியுடன் சேர்த்து இந்த படிப்பை நான்கரை ஆண்டுகள் பயில வேண்டும்.

பி.எஸ்சி., - உயிரியல் / தாவரவியல் / விலங்கியல்:
இத்தகைய 3 ஆண்டுகால இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, 12ம் வகுப்பில் அறிவியலை முக்கிய பாடப்பிரிவாக படித்து, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தால் போதும். முதுநிலைப் பட்டப்படிப்பை தொடர்ந்து, ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன.

பி.சி.ஏ.,:
பிளஸ் 2வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவர்கள், இப்படிப்பில் சேரலாம். இப்படிப்பை நிறைவு செய்தவர்கள் கம்ப்யூட்டர் மற்றும் அதன் சார்ந்த துறைகளில் பணி புரியலாம். தொடர்ந்து எம்.சி.ஏ., படித்தால் வாய்ப்புகள் பிரகாசமாகும்.

அனிமேஷன்:

பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவ மாணவர்கள் அனிமேஷன் துறையில் பயிற்சி பெறலாம். இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் அனிமேஷன் நிபுணர்களின் தேவை அதிகமாக உள்ளது. குறிப்பாக, சினிமாத் துறையில் இவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இத்துறையில் பி.எஸ்.சி., பி.ஏ., டிப்ளமோ படிப்புகள் படிக்கலாம்.

போட்டோகிராபி:
போட்டோகிராபியை பொழுது போக்காக மட்டுமல்லாமல் அதன்மீது அதீத ஆர்வம் கொண்ட மாணவர்கள் இதனை தொழில்முறை படிப்பாக தேர்ந்தெடுக்கலாம். திருமண போட்டோகிராபர், வைல்டு-லைப் போட்டோகிராபர், பேஷன் போட்டோகிராபர் என இதில் பல்வேறு பிரிவுகளும் உள்ளன. பி.ஏ., டிப்ளமா அல்லது சான்றிதழ் படிப்பாகவும் படிக்கலாம்.

பேஷன் டிசைனிங்:

அழகியல், புதுமை, ஸ்டைல் ஆகியவற்றில் ஆர்வமுள்ள மாணவர்கள் தேர்வு செய்யலாம். பி.எஸ்சி., -பேஷன் டிசைனிங், டிப்ளமோ இன் டிசைனிங் மற்றும் சான்றிதழ் படிப்பாகவும் வழங்கப்படுகிறது.

டிசைனிங்:

வளர்ந்து வரும் துறைகளில் இன்டீரியர் டிசைனிங் துறையும் ஒன்று. கார்ப்ரேட், பெரிய ஹோட்டல்கள், மண்டபங்கள், கலைத்துறைகள் என பல்வேறு இடங்களில் பணிபுரியலாம். சுய தொழில் வாய்ப்பும் பிரகாசம். பி.டெஸ்., டிப்ளமோ டிசைனிங், பி.ஏ., -இன்டீரியர் டிசைன், சான்றிதழ் படிப்புகளாகவும் இப்படிப்பை படிக்கலாம்.

இவைதவிர, துணை மருத்துவ படிப்புகள், பொறியியல், சட்டம், மீடியா, சுற்றுலா, ஹோட்டல் மேலாண்மை, நியூட்டிரிசன் மற்றும் டயட்டீசியன், விளையாட்டு, பைன் ஆர்ட்ஸ், இசை, நடிப்பு, இயக்கம், கிராபிக்ஸ் பல்வேறு கம்ப்யூட்டர் படிப்புகள் உட்பட ஏராளமான துறைகளில் சராசரி மதிப்பெண் பெற்றவர்களால் சேர்க்கை பெற முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us