Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனித குலத்துக்கு பாரபட்சம் இல்லாததாக ஏ.ஐ., இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

மனித குலத்துக்கு பாரபட்சம் இல்லாததாக ஏ.ஐ., இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

மனித குலத்துக்கு பாரபட்சம் இல்லாததாக ஏ.ஐ., இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

மனித குலத்துக்கு பாரபட்சம் இல்லாததாக ஏ.ஐ., இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

UPDATED : பிப் 12, 2025 12:00 AMADDED : பிப் 12, 2025 12:13 PM


Google News
Latest Tamil News
பாரிஸ்:
ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, எவ்வித பாகுபாடும் இல்லாததாக, மனிதகுலத்துக்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டும்.

நம்பிக்கை, வெளிப்படைத்தன்மையுடன், அனைவருக்கும் அந்த தொழில்நுட்பம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயல் உச்சி மாநாடு, ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் நகரில் நடக்கிறது. பிரான்சுடன் இணைந்து இந்தியா இதை நடத்துகிறது.

பெரும் மாற்றம்

இதில், பல நாட்டுத் தலைவர்கள், தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்த உச்சி மாநாட்டை நேற்று துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, நம் அரசியல், நிர்வாகம், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நுாற்றாண்டின் மனிதநேயத்துக்கான குறியீட்டை அது வகுத்து வருகிறது.

இந்த தொழில்நுட்பம், யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதைவிட அதிக வேகத்தில் அது பயன்படுத்தப்படுகிறது. அதுபோல நாடுகளுக்கு இடையே ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதையும் இது ஆழப்படுத்துகிறது.

மருத்துவம், கல்வி, விவசாயம், அறிவியல் என, பல துறைகளிலும், இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு அபரிமிதமாக உள்ளது. இது கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பெரும் புரட்சியையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை சுலபமாக எட்டுவதற்கு இது உதவுகிறது. இதற்கு, நாம் அனைவரும் நம் வளங்களை, திறன்களை ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டும்.

இந்த தொழில்நுட்பத்தை நாம் ஜனநாயகமாக்க வேண்டும். மக்களின் நலனுக்கானதாக இதை பயன்படுத்த வேண்டும். சைபர் பாதுகாப்பு, பொய் தகவல் பரப்புவது, டீப் பேக் போன்ற மோசடிகளை தடுப்பது குறித்து நாம் கவனிக்க வேண்டும்.

ஏ.ஐ., தொழில்நுட்பத்தால், மனிதர்களுக்கான வேலைகள் குறைந்துவிடும் என்பது பொதுவான அச்சமாக உள்ளது. ஆனால், வரலாற்றை பார்க்கும்போது, எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும், வேலைகளை குறைக்கவில்லை.

நம்பிக்கை

அதே நேரத்தில் வேலை செய்யும் முறையைத்தான் மாற்றியுள்ளது. ஏ.ஐ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில், நம் மக்களின் பணித் திறன்களில் மாற்றம் செய்ய வேண்டும். சரியான தகவல்கள், எவ்வித பாகுபாடும் இல்லாத, மனிதகுலத்துக்கு பயன் அளிப்பதாக, ஏ.ஐ., தொழில்நுட்ப தளங்கள் இருக்க வேண்டும்.

பரஸ்பரம் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மையுடன், அனைவருக்கும் இதன் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, குளோபல் சவுத் எனப்படும் வளர்ந்து வரும் நாடுகளும் அணுகும் வகையில் பொதுவெளியில் இந்த தொழில்நுட்பத்தின் தரவுகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்க துணை அதிபர் பாராட்டு

தன் பேச்சின்போது, ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, அது தொடர்பான மக்களின் கவலைகளை கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். புத்திசாலிதனத்தில் மிஷின்கள் மனிதர்களை மிஞ்சிவிடுமோ என்று சிலர் கவலையைத் தெரிவித்துள்ளனர். நம் சிறந்த எதிர்காலம், ஒருங்கிணைந்து அதற்காக பயணிப்பது என்பதற்கான சாவி, வேறு யாரிடமும் இல்லை. மனிதர்களிடமே உள்ளது. அந்தப் பொறுப்புதான், நம்மை வழிநடத்தும் என மோடி குறிப்பிட்டார்.

ஏ.ஐ., தொழில்நுட்பத்தை ஒரு சில நாடுகள் எப்படி ஆயுதமாக பயன்படுத்துகின்றன என்பதை மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து அவர் கூறியவற்றை ஏற்கிறேன். மனித குலத்துக்கு பலனளிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியதை வரவேற்கிறேன் என அமெரிக்காவின் துணை அதிபராக சமீபத்தில் பதவியேற்ற ஜே.டி. வான்ஸ் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us