Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ இளையராஜா இசை கற்பித்தல் மையம் ஐ.ஐ.டி.,யில் துவக்க ஒப்பந்தம்

இளையராஜா இசை கற்பித்தல் மையம் ஐ.ஐ.டி.,யில் துவக்க ஒப்பந்தம்

இளையராஜா இசை கற்பித்தல் மையம் ஐ.ஐ.டி.,யில் துவக்க ஒப்பந்தம்

இளையராஜா இசை கற்பித்தல் மையம் ஐ.ஐ.டி.,யில் துவக்க ஒப்பந்தம்

UPDATED : மே 21, 2024 12:00 AMADDED : மே 21, 2024 02:35 PM


Google News
சென்னை:
நாடு வளர்ச்சி பாதைக்கு செல்வதற்கு, புதிய கண்டு பிடிப்புகளை அதிகரிக்க செய்ய வேண்டும். கற்பனையும், கண்டுபிடிப்புகளும் அதிகமானால் தான் முன்னேற்றம் கிடைக்கும் என சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
இந்திய பாரம்பரியம் இசை மற்றும் கலாசாரத்தை, இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் தன்னார்வ இயக்கமாக, ஸ்பிக் மெக்கே உள்ளது.
ஆர்வம் தேவை
ஸ்பிக் மெக்கேவின், 9வது சர்வதேச மாநாடு சென்னை ஐ.ஐ.டி.,யில் நேற்று துவங்கியது. சிறப்பு விருந்தினராகஇசையமைப்பாளர் இளையராஜா, திரிபுராமாநில கவர்னர் இந்திரசேனா ரெட்டி பங்கேற்றனர்.
மாநாட்டை துவக்கி வைத்து இளையராஜா பேசியதாவது:
ஒரு கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்ள சென்னை வந்தேன். என் தாய் எனக்கும், என் தம்பிக்கும், 400 ரூபாய் தந்து அனுப்பி வைத்தார்.
அப்படி வந்த நான், இது நாள் வரை இசையை கற்றுக் கொண்டேனா என்றால் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொள்வதற்காக வந்த நான்,அனைவருக்கும் கற்றுத்தர தற்போதுமையம் ஆரம்பித்துள்ளேன்.
இசையை கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட போது, எனக்கு கற்றுத்தர யாரும் கிடையாது. ஒருவனுக்கு தண்ணீர் தருவதை விட, தாகத்தை உண்டு செய்தால், அவன் தேடி கண்டு பிடித்து விடுவான்.
எந்த வேலையாக இருந்தாலும், அதில் தாகம் எற்பட வேண்டும். நான் சாதித்து விட்டதாக பலரும் சொல்கின்றனர். கிராமத்தில் இருந்து எப்படி கிளம்பி வந்தேனோ; அதை போலவே இப்போதும் இருக்கிறேன். நிச்சயம் என்னை போல் பல இளையராஜாக்கள் இந்த மையத்தில் வருவர். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், காமகோடி பேசியதாவது:
மாணவணாக இருந்தபோது, இது மாதிரியான நிகழ்ச்சியை கண்டு களித்துள்ளேன். இப்போது முன்நின்று நடத்துவது பெரும் மகிழ்வை தருகிறது.
நம் கலை இலக்கிய வடிவங்கள், இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ள வைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையாக, நாடு முழுதும் உள்ள மாநிலங்களை நினைவுப்படுத்தும் வகையில், இந்த மாநாடு அமையும்.
இட ஒதுக்கீடு
நாடு வளர்ச்சி பாதைக்கு செல்வதற்கு புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிக்கச்செய்ய வேண்டும். கற்பனையும், கண்டுபிடிப்புகளும் அதிகமானால் தான், முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில், தேசிய அளவில் சாதிக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டை அறிமுகம் செய்துள்ளோம்.
இதேபோல் கலைகளுக்கான கோட்டாவையும், விரைவில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். பாரம்பரிய நம் இசையை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக வழங்கியவர் இளையராஜா.
அதை போற்றும் விதமாக, அவர் பெயரில் சென்னை ஐ.ஐ.டி.,யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்பித்தல் மையம் அமைக்கப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஸ்பிக்தலைவர் ராதாமோகன் திவாரி, தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us