Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/70 சதவீதம் ஓட்டுப்பதிவு இலக்கு..தேர்தலுக்குப் பின் 2 நாள் விடுமுறையால் கவலை

70 சதவீதம் ஓட்டுப்பதிவு இலக்கு..தேர்தலுக்குப் பின் 2 நாள் விடுமுறையால் கவலை

70 சதவீதம் ஓட்டுப்பதிவு இலக்கு..தேர்தலுக்குப் பின் 2 நாள் விடுமுறையால் கவலை

70 சதவீதம் ஓட்டுப்பதிவு இலக்கு..தேர்தலுக்குப் பின் 2 நாள் விடுமுறையால் கவலை

UPDATED : மார் 27, 2024 12:00 AMADDED : மார் 27, 2024 10:52 AM


Google News
Latest Tamil News
சென்னை:
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாள் வெள்ளிக்கிழமை, அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், சென்னையில் இருந்து பலரும் வெளியூர் செல்வர். இதனால், சென்னையில் 70 சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை எட்ட, தேர்தல் அலுவலர்கள் தீவிர விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை மாவட்டத்தில், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள் வருகின்றன. இதில், வடசென்னை லோக்சபா தொகுதியில் திருவொற்றியூர் சட்டசபை தொகுதியும், தென்சென்னையில் சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியும் கூடுதலாக இணைகின்றன.அதனால், சென்னை மாவட்டத்தில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள், வரும் ஏப்., 19ம் தேதி நடைபெறும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, 4,676 ஓட்டுச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், மாநிலம் முழுதும் 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவான நிலையில், சென்னையில் 59.40 சதவீதம் மட்டுமே பதிவானது.அதேநேரம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாவட்டத்தில், 43.65 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகின. கடந்த 2019 லோக்சபா தேர்தலிலும், 59 சதவீத ஓட்டுகள் மட்டுமே சென்னையில் பதிவாகின.அதிகம் படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் இருந்தும், சென்னையில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து வருகிறது. வரும் லோக்சபா தேர்தலில், சென்னையில் குறைந்தபட்சம் 70 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதற்காக பள்ளி மாணவர்கள் வாயிலாக பூங்காக்களில், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆட்டோ ஓட்டுனர்கள், கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., பணியாளர்கள் உள்ளிட்டோருக்கும், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.கடந்த தேர்தல்களில், மிக குறைந்த ஓட்டுப்பதிவு நடந்த 1,000த்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில், அங்குள்ள மக்களுக்கு வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, பல்வேறு விழிப்புணர்வு வாயிலாக, 70 சதவீதம் ஓட்டுப்பதிவை இலக்காக வைத்து, மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் லோக்சபா தேர்தல், வரும் ஏப்., 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதற்கு அடுத்து, சனிக்கிழமை மற்றும் ஞாயிறு என, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் வரும் லோக்சபா தேர்தலிலும் ஓட்டுப் பதிவு சதவீதம் குறையும் என, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறியதாவது:
சென்னையில் மத்திய சென்னை, வட சென்னையைக் காட்டிலும், ஐ.டி., பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக, தென்சென்னை உள்ளது. இங்குள்ளோர், தேர்தல் நாளுக்குப் பின் தொடர் விடுமுறை வந்தால், கோடைக்கால சுற்றுலாவுக்கு சென்று விடுகின்றனர். இதனால், ஒவ்வொரு தேர்தலிலும் தென்சென்னையில் தான் குறைந்த ஓட்டுகள் பதிவாகின்றன.தற்போது, ஓட்டுப்பதிவு நாள் வெள்ளிக்கிழமை என்பதால், தொடர்ச்சியாக சனி, ஞாயிறு விடுமுறையும் வருகிறது. எனவே, இந்தாண்டும் சென்னையில் மற்ற மாவட்டங்களை விட, குறைவான ஓட்டுகள் பதிவாகுமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது.ஆனால், தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு பல்வேறு வகையில், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னையில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட 10,370 மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கும் மேற்பட்ட, 63,863 முதியவர்கள் விருப்பத்தின்படி, அவர்கள் வீட்டில் இருந்து தபால் ஓட்டு போடும் வகையில் படிவம் வழங்கி உள்ளோம். ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளோம் என சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர், மாநகராட்சி கமிஷனர், ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us