Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரண்டு ஆண்டுகளில் 4வது செயலர்: கலகலக்குது கல்வித்துறை

இரண்டு ஆண்டுகளில் 4வது செயலர்: கலகலக்குது கல்வித்துறை

இரண்டு ஆண்டுகளில் 4வது செயலர்: கலகலக்குது கல்வித்துறை

இரண்டு ஆண்டுகளில் 4வது செயலர்: கலகலக்குது கல்வித்துறை

UPDATED : பிப் 12, 2025 12:00 AMADDED : பிப் 12, 2025 12:07 PM


Google News
மதுரை:
கல்வித்துறையில், 2023 முதல் தற்போது வரை மூன்று செயலர்கள் மாற்றம் செய்யப்பட்டு, நான்காவதாக சந்திரமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். ஒரு துறையின் உச்ச பதவி இவ்வாறு அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதால், அந்தந்த அதிகாரிகள் சிந்தனைக்கு ஏற்ப பின்பற்றப்படும் திட்டச் செயல்பாடுகளின் மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

சுகாதாரமும், கல்வியும், தி.மு.க.,வின் இரு கண்கள் என, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி தெரிவித்து வருகிறார். ஆனால், கல்வி துறைகளில் தான் பாலியல் புகார்கள் உட்பட பல்வேறு சர்ச்சைகள் கிளம்புகின்றன. குறிப்பாக, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில், பள்ளி மாணவியர் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு, பதில் அளிப்பதில் ஆளுங்கட்சி திணறி வருகிறது.

இந்நிலையில், இத்துறையின் உச்ச பதவிக்கு தகுதியான அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற நெருக்கடியில் தான், இவ்வாறு அதிகாரிகள் மாற்றம் நடக்கிறதா என்று, கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த 2023ல் இத்துறை செயலராக இருந்த காக்கர்லா உஷாவிற்கு பின், குமரகுருபரன் சில மாதங்களிலும், அதற்கு பின் பொறுப்பேற்ற மதுமதி சில மாதங்கள் மட்டுமே பதவி வகித்த நிலையில் மாற்றப்பட்டனர்.

இதற்கிடையே, காக்கர்லா உஷா செயலராக இருந்த போது, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில், கல்வித்துறை கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு அதில் நந்தகுமார் நியமிக்கப்பட்டார். இவரது இடமாற்றத்திற்கு பின், அந்த கமிஷனர் பதவியும் நீக்கப்பட்டது. அந்த வகையில் இத்துறையில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு, தற்போது சந்திரமோகன் புதிய செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

ஒரு துறையில் இதுபோன்ற செயலர்கள் மாறும் போது, அதுவரை அந்த துறையில் பின்பற்றப்பட்ட சில நடைமுறைகளில் அடிமட்டம் வரை மாற்றம் ஏற்படும். புதிய அதிகாரி நியமித்து அவரது வழிகாட்டுதல்களை பின்பற்றும் வரை, திட்டச் செயல்பாடுகளில் தேக்கம் ஏற்படும்.

தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு, ஆசிரியர் தகுதி தேர்வு உண்டா இல்லையா என்ற பிரச்னை, அதுதொடர்பான நீதிமன்ற வழக்குகள், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்ந்த நீண்டகாலம் தீர்க்கப்படாத பிரச்னைகள் என, ஏராளம் உள்ளன. ஒரு செயலர் ஓராண்டாவது நீடித்தால் மட்டுமே, இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us