Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/21ம் நூற்றாண்டு திறன்கள்!

21ம் நூற்றாண்டு திறன்கள்!

21ம் நூற்றாண்டு திறன்கள்!

21ம் நூற்றாண்டு திறன்கள்!

UPDATED : அக் 31, 2024 12:00 AMADDED : அக் 31, 2024 12:08 PM


Google News
Latest Tamil News
நிலைத்தன்மை திறன்:

சி.எஸ்.ஆர்., விதிமுறைப்படி, ஓர் தொழில் நிறுவனம் தனது சமூக பொறுப்பை உணர்ந்து லாபத்தில் 2 சதவீதத்தை சமூகநல பணிகளுக்கு செலவிட வேண்டியது கட்டாயம். அனைத்து தொழில் நிறுவனங்களும் நிலைத்தன்மையை எதிர்பார்க்கும் இன்றைய சூழலில், இளைஞர்கள் அவை சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சூழலியல் கோட்பாடுகளை அறிந்துகொள்வதோடு, மனிதர்களின் செயல்பாடுகளால் சுற்றுச்சூழலில் நிகழும் தாக்கங்களை புரிந்துகொள்ள வேண்டும்.
நீர், ஆற்றல் மற்றும் மூலப்பொருட்கள் உட்பட இயற்கை வளங்களை திறமையாக நிர்வகிப்பதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதோடு, நிலைத்தன்மையை மனதில் கொண்டு சுற்றுச்சூழலுக்கு நலம் பயக்கும் பொருட்களில் கவனம் செலுத்துதல் வேண்டும். நிலைத்தன்மை சவால்களுக்கு ஆக்கப்பூர்வமான தீர்வுகளை உருவாக்குதல், சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொள்தல் ஆகியவை வாய்ப்புகளை எளிதாக்கும்.
தொடர்பியல் திறன்:

தனிப்பட்ட உறவுகள் முதல் தொழில்முறை வரை, வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தகவல் தொடர்பு திறன் அவசியமாகிறது. குறிப்பாக, நமது பெருகிவரும் உலகமயமான சூழலில், சர்வதேச வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்க, தொடர்பியல் திறன் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொழில்நுட்ப திறன்:


தொழில்நுட்ப திறன் குறித்து பேசுகையில், சமீபகாலங்களாக அனைத்து தரப்பினரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள 'ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' குறித்து விளக்குவது இங்கே அவசியமாகிறது. கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில், வேலை வாய்ப்புகளை கம்ப்யூட்டர் குறைத்துவிடும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், உண்மையில் கம்ப்யூட்டர் குறித்த அறிவு வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளது.
அதுபோலவே, அடுத்த 5 ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்புகளை ஏ.ஐ., உருவாக்கும். அத்தகைய மாற்றத்திற்கு ஏற்ப, ஏ.ஐ., உட்பட தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். தொழில் வெற்றி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக்கொள்வது என்றுமே அவசியம். தொடர்ச்சியான கற்றல், ஒட்டுமொத்த செயல்திறனையும், வாய்ப்புகளையும் கணிசமாக மேம்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது.
மனித திறன்:

நமது சொந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது மற்றும் நிர்வகித்தல் போலவே, மற்றவர்களின் உணர்ச்சிகளை அங்கீகரித்தலும் அவசியம். நேர்மறையான உறவுகளை வளர்ப்பதற்கு மட்டுமின்றி, புதிய சவால்களை நிர்வகிப்பதற்கும் இது உதவுகிறது. ஒரு பொதுவான இலக்கை நோக்கி, மற்றவர்களுடன் திறம்பட இணைந்து செயல்பட, பல்வேறு கண்ணோட்டங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிவதில், ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் ஒத்துழைப்புடன் பணியாற்றுதல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்குவதும் நல்லுறவை வளர்க்க உதவுகிறது. இத்தகைய 21ம் நூற்றாண்டிற்கு அவசியமான திறன்களை வளர்த்துக்கொள்வது வருங்காலத்தை வசமாக்கிக்கொள்ள உதவும்.
-கிரண் கார்னிக், முன்னாள் தலைவர், நாஸ்காம்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us