Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகை

என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகை

என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகை

என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகை

நவ 25, 2023 12:00 AMநவ 25, 2023 12:00 AM


Google News
மத்திய அரசின் நேஷனல் மீன்ஸ்-கம்-மெரிட் ஸ்காலர்ஷிப் - என்.எம்.எம்.எஸ்., திட்டத்தில் உதவித்தொகை பெற விரும்பும் தகுதியான பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 8ம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் இடைநிறுத்தப்படுவதைத் தடுக்கவும், மேலும் கல்வியைத் தொடர அவர்களை ஊக்குவிக்கவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
தகுதிகள்:8ம் வகுப்பு தேர்வில் குறைந்தது, 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி பெறுகிறார்கள். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. பெற்றோரின் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அதிகபட்சமாக 4 ஆண்டுகளுக்கு என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது, 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த உதவித்தொகை இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அடுத்த கட்டமாக, 11ம் வகுப்பில் என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகையைத் தொடர பத்தாம் வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. 
உதவித்தொகை விபரம்:9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை புதுப்பிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒருவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு தலா ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையைப் பெற மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். தேர்வை எழுத விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. 
விண்ணப்பிக்கும் முறை:உதவித்தொகை குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வ இணையதளமான https://scholarships.gov.in மற்றும் அந்தந்த மாநில அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் வெளியிடப்படுகிறது. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:மென்டல் எபிலிட்டி டெஸ்ட் - எம்.ஏ.டி., மற்றும் ஸ்காலஸ்டிக் ஆப்டிட்யூட் தேர்வு - எஸ்.ஏ.டி., என இரண்டு தாள்கள் இடம்பெறும். ஒவ்வொரு தாளும் 90 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாளாக இருக்கும். 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு கணிதம், சமூக அறிவியல், பொது அறிவியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் தேர்வு நேரம் 90 நிமிடங்கள். மொத்தம் 180 வினாக்களுக்கு 180 நிமிடங்கள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாளிலும் குறைந்தது, 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.
விபரங்களுக்கு: https://scholarships.gov.in 






      Our Apps Available On




      Dinamalar

      Follow us