ஜாமினில் வந்தாலும் கெஜ்ரிவால் சாதிப்பாரா? காத்திருக்கும் சவால்கள்
ஜாமினில் வந்தாலும் கெஜ்ரிவால் சாதிப்பாரா? காத்திருக்கும் சவால்கள்
ஜாமினில் வந்தாலும் கெஜ்ரிவால் சாதிப்பாரா? காத்திருக்கும் சவால்கள்

அவப்பெயர்:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு, ஆளும் ஆம் ஆத்மிக்கு டில்லியில் கடும் நெருக்கடியை கொடுத்துள்ள சூழலில், ஜாமினில் வெளியே வரும் கெஜ்ரிவால், அதை சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தன் கட்சி மீதான அவப்பெயரை துடைப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
சட்டசபை தேர்தல்:
டில்லி சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கவுள்ள நிலையில், கட்சி மீதும், ஆட்சி மீதும் ஏற்பட்டுள்ள அதிருப்தியை தீர்க்கும் பொறுப்பு கெஜ்ரிவாலின் தோள்களில் ஏறியுள்ளது. கடந்த இரண்டு முறை நடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, அடுத்த தேர்தலிலும் அதே வெற்றியை ருசிப்பதற்கான பணிகளை அவர் செய்ய வேண்டும்.
தண்ணீர் தட்டுப்பாடு:
கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தத்தளித்து வரும் டில்லி மக்களின் நீர் தேவையை உணர்ந்து, அதற்கான பணிகளையும் கெஜ்ரிவால் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டில்லி மேயர் தேர்தல் கடந்த ஏப்., 26ல் நடக்கவிருந்த நிலையில், கெஜ்ரிவாலின் சிறைவாசத்தால் அது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தை முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் வாயிலாக மட்டுமே அணுக முடியும் என சட்டம் சொல்வதால், அதை சரிசெய்யும் கடமையும் கெஜ்ரிவால் முன் உள்ளது.
உதவி தொகை:
கெஜ்ரிவால் சிறை செல்லும் முன், 'முக்கிய மந்திரி மகிளா சம்மன் யோஜனா' எனப்படும், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சர் ஆதிஷி அறிவித்தார். அடுத்த ஆண்டு முதல், அது வழங்கப்படுவதற்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்ட போது, கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் ஜாமினில் வெளியே வந்தால், அந்த திட்டத்திற்கான பணிகளும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கவர்னருடன் மோதல்:
டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனாவுடன் தொடரும் மோதல் போக்கின் நடுவே, இத்தகைய சவால்களை முறியடிக்க கடுமையாக கெஜ்ரிவால் உழைத்தாலும், அவ்வப்போது வழக்குகள் தொடர்பாக நீதிமன்ற வாசல்களையும் அவர் மிதிக்க வேண்டி வரும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.