மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., மீளுமா?
மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., மீளுமா?
மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., மீளுமா?
UPDATED : ஜூன் 16, 2024 02:21 PM
ADDED : ஜூன் 16, 2024 12:37 AM

ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு, வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், இந்த மாநிலங்களில் பெரிய அளவில் வெற்றி பெறாத பா.ஜ., சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 240 தொகுதிகளில் வெற்றி பெற்று, பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், பெரும்பான்மைக்கு தேவையான, 272 தொகுதி களை அக்கட்சி பெறவில்லை.
அதே சமயம், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவுடன், மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்து உள்ளது.
கடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் பெரும்பான்மையை தாண்டி வெற்றி பெற்ற பா.ஜ., இந்த தேர்தலில், அதற்கு குறைவான தொகுதிகளையே கைப்பற்றியது. இந்த முறை, காங்., தலைமையிலான, எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணி 235 தொகுதிகளை வென்று வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது.
வரும் அக்டோபரில் ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த மாநிலங்களில், லோக்சபா தேர்தலில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பா.ஜ., வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், சட்டசபை தேர்தல்களை அக்கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
![]() |
ஹரியானா
ஹரியானாவில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன், மார்ச் 12ல், முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டாருக்கு பதிலாக, குருஷே த்ரா எம்.பி.,யாக இருந்த நாயப் சிங் சைனியை, முதல்வராக பா.ஜ., மேலிடம் நியமித்தது. தேர்தலை கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு, பா.ஜ.,வுக்கு எந்த பலனையும் அளிக்கவில்லை.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், ஹரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றிய பா.ஜ., அதே ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில், 40ல் வென்றது.
தேர்தலுக்கு பின், ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. எனினும் இந்த கூட்டணி, லோக்சபா தேர்தலுக்கு முன் முறிந்தது. சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஹரியானாவில் பா.ஜ., ஆட்சி தொடர்கிறது.
கடந்த முறை 10 தொகுதிகளையும் அள்ளிய பா.ஜ., இந்த முறை ஐந்து தொகுதிகளை மட்டுமே வென்றது. எதிர்க்கட்சியான காங்., சரிசமமாக ஐந்து தொகுதிகளை கைப்பற்றியது. 2019ல், 58 சதவீதமாக இருந்த பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் 46 சதவீதமாக குறைந்துள்ளது.
அதே சமயம், காங்., ஓட்டு சதவீதம் 28.5ல் இருந்து 43.67 சதவீதமாக அதிகரித்துள்ளது, பா.ஜ.,வை மேலும் கவலை அடையச் செய்துள்ளது.
ஹரியானாவில், பா.ஜ.,வின் லோக்சபா தேர்தல் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஜாட் சமூகத்தினருக்கு எதிராக அக்கட்சி மாறி விட்டதாகக் கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் 20 - 25 சதவீதம் வரை ஜாட் சமூகத்தினர் உள்ளனர்.
கடந்த 2023ல், பா.ஜ., மாநில தலைவர் ஓம் பிரகாஷ் தங்கருக்குப் பதிலாக, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயப் சிங் சைனி, கட்சி தலைவராக நியமிக்கப்பட்டதால், ஜாட் சமூகத்தினர் கோபமடைந்தனர்.
மேலும் அவர் முதல்வராக பதவியேற்றது, அந்த சமூகத்தின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.
பா.ஜ., தங்களை புறக்கணித்து விட்டதாக ஜாட் சமூகத்தினர் கூறுகின்றனர். இதையடுத்து, மாநிலத்தில் உள்ள வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற, பல நடவடிக்கைகளை முதல்வர் நாயப் சிங் சைனி எடுத்து வருகிறார்.
மஹாராஷ்டிரா
மஹாராஷ்டிராவிலும் பா.ஜ.,வின் வெற்றி வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 2014 சட்டசபை தேர்தலில் 122 இடங்களையும், 2019ல் பிளவுபடாத சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து 105 இடங்களையும் அக்கட்சி கைப்பற்றியது.
கடந்த 2022ல், ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் சிவசேனாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மஹாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைந்தது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 23 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ., இந்த முறை ஒன்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அதன் கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்., ஆகியவை முறையே ஏழு மற்றும் ஒரு தொகுதிகளை கைப்பற்றி உள்ளன.
அதே சமயம், காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு - சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு அடங்கிய, 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி, 30 தொகுதிகளை கைப்பற்றி வலுவான கூட்டணியாக உருவெடுத்துள்ளது.
சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து வந்தவர்களுடன் பா.ஜ., அமைத்த கூட்டணி, எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
மேலும், மஹாராஷ்டிராவின் மக்கள் தொகையில் 33 சதவீதம் பேர் மராத்தாக்கள்.
இவர்களது இட ஒதுக்கீடு கோரிக்கையையும் பா.ஜ., நிறைவேற்றவில்லை. அது மட்டுமின்றி, வெங்காயத்தின் மீதான 40 சதவீத வரியை அமல்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை, மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
ஜார்க்கண்ட்
மஹாராஷ்டிரா, ஹரியானாவைக் காட்டிலும், ஜார்க்கண்டில் பா.ஜ.,வின் செயல்பாடு அவ்வளவு மோசமாக இல்லை.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., - அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் ஒன்றிய கட்சி, ஒன்பது தொகுதிகளில் வென்றது. இது, 2019ஐ விட மூன்று குறைவாகும்.
அதே சமயம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்., தலைமையிலான இண்டியா கூட்டணி இங்கு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த வேகத்தில், இங்கு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., முனைப்பு காட்டி வருகிறது.
மஹாராஷ்டிரா, ஹரியானாவில், லோக்சபா தேர்தலில் பெரிய வெற்றியை பெறாத பா.ஜ., வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -