குழந்தை பெற கணவருக்கு 'பரோல்' கேட்கும் மனைவி
குழந்தை பெற கணவருக்கு 'பரோல்' கேட்கும் மனைவி
குழந்தை பெற கணவருக்கு 'பரோல்' கேட்கும் மனைவி
UPDATED : ஜூன் 03, 2024 09:11 PM
ADDED : ஜூன் 03, 2024 09:05 PM

பெங்களூரு
: குழந்தை பெற்று கொள்வதற்காக, சிறையில் இருக்கும் கணவருக்கு,
'பரோல்' வழக்குமாறு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மனைவி வழக்கு
தொடர்ந்துள்ளார்.கர்நாடக மாநிலம், கோலாரை சேர்ந்தவர்
ஆனந்த். ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு, ஆயுள் தண்டனை
விதித்து, 2019ல் கோலார் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம்
உத்தரவிட்டது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்
அடைக்கப்பட்டார்.
ஆயுள் தண்டனையை
எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ஆனந்த் மேல்முறையீடு செய்தார்.
விசாரித்த நீதிமன்றம், ஆயுள் தண்டனையை, 10 ஆண்டு சிறையாக
மாற்றியது.
சிறை செல்வதற்கு முன்பே ஆனந்தும், ஒரு
இளம்பெண்ணும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்வதற்காக,
ஆனந்துக்கு, 'பரோல்' வழங்கும்படி உயர் நீதிமன்றத்தில் இளம்பெண் மனு
செய்தார்.
விசாரித்த நீதிமன்றம், 2023ம்
ஆண்டு மார்ச் 31 முதல், ஆகஸ்ட் 20 வரை 143 நாட்கள், ஆனந்தை பரோலில்
விடுவிக்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.இதன்படி, கடந்த
ஆண்டு ஏப்ரல் 11ல் ஆனந்தும், இளம்பெண்ணும் திருமணம் செய்தனர்.
பரோல் காலம் முடிந்ததும், மனைவியை அவரது பெற்றோர் வீட்டில்
விட்டுவிட்டு, ஆனந்த் சிறைக்கு திரும்பினார்.
இந்நிலையில்,
குழந்தை பெற்று கொள்வதற்கு வசதியாக, ஆனந்தை 90 நாட்கள் பரோலில்
அனுப்பும்படி, பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரியிடம், ஆனந்தின்
மனைவி மனு கொடுத்தார். அவர்கள் மனுவை பரிசீலனை செய்யவில்லை.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவில்,
'திருமண வாழ்க்கை வாயிலாக குழந்தை பெற்று கொள்வது, அனைவருக்குமான
உரிமை. குழந்தையை பெற்று எடுப்பது, என் நடத்தையை சரி செய்ய உதவுகிறது.
'என் கணவர் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் போது, அமைதியான
வாழ்க்கை வாழ, குழந்தை இருப்பது வழிவகை செய்யும். இதனால், என் கணவரை
பரோலில் விடுவிக்க, சிறை
கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்' என தெரிவித்துள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.