அறிவித்த ரூ.820 கோடி எங்கே? ஆம் ஆத்மி கேள்வி
அறிவித்த ரூ.820 கோடி எங்கே? ஆம் ஆத்மி கேள்வி
அறிவித்த ரூ.820 கோடி எங்கே? ஆம் ஆத்மி கேள்வி
ADDED : ஜூன் 13, 2025 08:34 PM
புதுடில்லி:“டில்லி அரசு அறிவித்த 820 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு இன்னும் வழங்கப்படவில்லை,”என, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அங்குஷ் நரங் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான அங்குஷ் நரங், நிருபர்களிடம் கூறியதாவது:
அடிப்படை வரி ஒதுக்கீட்டு கட்டமைப்பின்படி, 820 கோடி ரூபாய் நிதியை மாநகராட்சிக்கு வழங்கப்படும் என, டில்லி பா.ஜ., அரசு, 6ம் தேதி அறிவித்தது. ஆனால், அந்த நிதி இன்னும் வந்து சேரவில்லை. இந்த தாமதத்தால், மாநகராட்சி நிதிச் சிக்கலில் தவிக்கிறது.
மாநகராட்சியில், பா.ஜ., பொறுப்பேற்றதில் இருந்து, இரண்டு மாதங்களாக, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தாமதமாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை.
ஆம் ஆத்மி மேயர் பொறுப்பில் இருந்தபோது, நிதி சிறப்பாக பராமரிக்கப்பட்டது. அதிகாரி முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் தாமதம் இன்றி, மாதத்தின் கடைசி வேலை நாளில் சம்பளம் வழங்கப்பட்டது. பா.ஜ.,வின் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கான பணியில் தோல்வியடைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள மேயர் ராஜா இக்பால் சிங், “ஆம் ஆத்மி கட்சி எப்போதும் விமர்சனம் மட்டுமே செய்து வருகிறது. டில்லியில், 10 ஆண்டுகள் ஆட்சி செய்த, மாநகராட்சியை இரண்டரை ஆண்டுகள் நிர்வகித்த ஆம் ஆத்மி, எந்த பெரிய மாற்றத்தையும் செய்யவில்லை. மக்கள் ஏன் ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து அகற்றினர் என்பதைப் பற்றி அக்கட்சியினர் ஆராய வேண்டும். மாநகராட்சியில் அனைவருக்கும் சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படும்,”என்றார்.