மெஹூல் சோக்சி எங்கள் நாட்டில் இல்லை: சொல்கிறார் ஆன்டிகுவா அமைச்சர்
மெஹூல் சோக்சி எங்கள் நாட்டில் இல்லை: சொல்கிறார் ஆன்டிகுவா அமைச்சர்
மெஹூல் சோக்சி எங்கள் நாட்டில் இல்லை: சொல்கிறார் ஆன்டிகுவா அமைச்சர்
ADDED : மார் 19, 2025 10:26 PM

புதுடில்லி: '' வங்கி மோசடி வழக்கில் சிக்கி தப்பியோடிய மெஹூல் சோக்சி எங்கள் நாட்டில் இல்லை'', என ஆன்டிகுவா வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி உள்ளிட்டோர், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பினர்.
இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குக்கள் நிலுவையில் உள்ள நிலையில், நீரவின் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்து வருகிறது.
மெஹூல் சோக்சி ஆன்டிகுவா நாட்டில் வசித்து வந்தார். ஆனால், அவர் புற்றுநோய் பாதிப்பால் பெல்ஜியம் நாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் டில்லியில் நடக்கும் கருத்தரங்கத்தில் பங்கேற்க வந்த ஆன்டிகுவா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செட் கிரீன கூறியதாவது: மெஹூல் சோக்சி எங்கள் நாட்டில் இல்லை. அவர், எங்கள் நாட்டின் குடிமகனாக இருந்தாலும், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இந்த விவகாரத்தில் இரு நாட்டு அரசுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன.
இரு நாடுகளும் சட்டத்தின் ஆட்சியை மதித்து நடக்கும் நாடுகள். மெஹூல் சோக்சி விவகாரம் சட்ட ஆய்வுக்கு உட்பட்டது. அது முடிவாகும் வரை, எதுவும் சொல்லவும், செய்யவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.