சும்மா விடமாட்டோம்! கர்நாடக காங்., அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சும்மா விடமாட்டோம்! கர்நாடக காங்., அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சும்மா விடமாட்டோம்! கர்நாடக காங்., அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
ADDED : ஜூன் 13, 2025 12:05 AM

பெங்களூரு: 'பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் பலியான வழக்கில் நீதிபதி, மாஜிஸ்திரேட் ஆகிய இரண்டு விசாரணைகள் ஏன் நடத்தப்படுகின்றன?' என கேள்வி எழுப்பிய கர்நாடக உயர் நீதிமன்றம், 'விசாரணை அறிக்கையில் ஏதாவது வேறுபாடு காணப்பட்டால், அரசை சும்மா விடமாட்டோம்' எனவும் எச்சரித்துள்ளது.
கடந்த 4ம் தேதி, ஆர்.சி.பி., கிரிக்கெட் அணிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்க, பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
இது குறித்து, பெங்களூரு கலெக்டர் தலைமையிலான மாஜிஸ்திரேட் விசாரணை மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையிலான நீதி விசாரணைக்கு மாநில காங்., அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த சம்பவத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. 10ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. அன்றைய தினம் அரசு தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
நோக்கம்
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, ''நீங்கள் எழுப்பிய ஒன்பது கேள்விகளுக்கும் பதில் அளித்து, 'சீல்' வைக்கப்பட்ட உறையில் அறிக்கையை சமர்ப்பித்து உள்ளோம்.
''அனைத்து ஆவணங்களும் கன்னடத்தில் உள்ளன. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.
அப்போது, 'இந்த விவகாரத்தில் மாஜிஸ்திரேட், ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை என்று ஏன் இரண்டு விசாரணை அமைப்புகள் விசாரிக்கின்றன என்று எங்களுக்கு தெரியவில்லை.
'மாஜிஸ்திரேட், நீதி விசாரணை நடத்துபவர்களிடம் என்னென்ன விசாரிக்க வேண்டும் என்று, அரசு ஏதாவது அறிவுறுத்தல் வழங்கி உள்ளதா?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
'மாஜிஸ்திரேட், நீதி விசாரணை நடத்துபவர்களுக்கு, விசாரணையின் நோக்கம் குறித்து தெளிவு படுத்தப்பட்டுள்ளது' என, அட்வகேட் ஜெனரல் பதில் அளித்தார்.
'இரண்டு ஆணையங்களின் விசாரணை அறிக்கையில் ஏதாவது வேறுபாடு காணப்பட்டால், அரசை சும்மா விடமாட்டோம்' என, நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.
மேலும், 'வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை பாதுகாக்கும் பொறுப்பை, மாநில அரசு யாருக்கு கொடுத்துள்ளது? அரசு துறைகளிடம் கொடுத்திருந்தால், ஆவணங்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஒத்திவைப்பு
'இதனால் ஆவணங்களை, அரசின் தலைமை செயலரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் பாதுகாப்பில் ஆவணங்கள் இருக்க வேண்டும்' என, நீதிபதிகள் கூறினர்.
'இந்த வழக்கில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படும். எதையும் மறைக்கும் நோக்கம் அரசிடம் இல்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதால், நாங்கள் இந்த வழக்கில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்கிறோம்' என, அட்வகேட் ஜெனரல் கூறினார்.
இதையடுத்து, மனு மீதான விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.